இலங்கை கிரிகெட் அணியுடன் திலங்கவும் லாஹூருக்கு பயணம் | தினகரன்


இலங்கை கிரிகெட் அணியுடன் திலங்கவும் லாஹூருக்கு பயணம்

பாகிஸ்தானுக்கு எதிராக லாஹூரில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பலம்வாய்ந்த அணி தெரிவு செய்யப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஏற்கனவே 22 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாமை தெரிவுக்குழுவினர் பெயரிட்டனர்.

இறுதி 15 வீரர்களைக் கொண்ட குழாம் நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பாகிஸ்தானின் லாஹூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பஸ் வண்டி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோக தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் இலங்கை விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாகிஸ்தான் செல்வதற்கு வீரர்கள் தயக்கம் காட்டியபோதிலும் அணி ஒன்று பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படும் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் திங்களன்று உறுதி செய்தது. இந்தப் போட்டியில் விளையாட பிரதான வீரர்கள் தயக்கம் காட்டினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பலம் குன்றிய அணியை லாகூர் அனுப்புமா என்ற கேள்வி எழாமலில்லை.

ஏனெனில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான அணித் தலைவர் உபுல் தரங்க இந்த சுற்றுப் பயணத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் பலம்வாய்ந்த அணி ஒன்று பெயரிடப்படும் என இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்ஹ தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் அரசு ஆகியன உயிர்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ள போதிலும் வீரர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் வீரர்களை 24 மணித்தியாலங்கள் மாத்திரம் பாகிஸ்தானில் தங்கவைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆலோசித்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க இலங்கை வீரர்களுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபாலவும் லாஹூருக்கு செல்வார் என நிறுவனத்தின் ஊடகப் பிரிவு திங்களன்று அறிவித்தது.

மேலும் பாகிஸ்தானுக்கு பயணமான உலக அணிக்கு வழங்கப்பட்ட அதே அளவு உயர் பாதுகாப்பு வழங்கப்படும் என இலங்கை வீரர்களுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதுடன் மத்திஸ்தர்களை பாகிஸ்தான் அனுப்புவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையும் விருப்பம் தெரிவித்துள்ளது.

வீரர்கள் தயக்கம் காட்டும் நிலையில் பாகிஸ்தான் செல்வதற்கு கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட குருசிங்ஹ, 1996 உலகக் கிண்ணப் போட்டிகளின்போது வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதத்தின் மத்தியில் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் நினைவுகூரத் தவறவில்லை.

இலங்கையில் அமைதியின்மை நிலவியதால் அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் 1996 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கைக்கு வரமுடியாது என அறிவித்த சொற்ப தினங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டு அணியாக இங்கு வந்து விளையாடி இலங்கையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...