3 இலட்சம் மெ.தொன் அரிசி உடன் இறக்குமதிக்கு ஏற்பாடு | தினகரன்

3 இலட்சம் மெ.தொன் அரிசி உடன் இறக்குமதிக்கு ஏற்பாடு

லங்கா சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியின் விலை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 80 ரூபாவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் டி.எம்.கே.பி தென்னகோன் நேற்று தெரிவித்தார்.

அத்துடன் டிசம்பர் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு 03 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அமைச்சரவை உபகுழு மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுத் தருவதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளது. இதற்கமைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசியின் விலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களதும் விலையை குறைப்பதற்கும் அதே விலையில் கிராம மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை லங்கா சதொச முன்னெடுத்துள்ளது. அதற்கமைய கிராமத்திலுள்ள வர்த்தக சங்கத்தினர் தமது தேவைகளை சதொச பிராந்திய முகாமையளரிடம் அறிவித்து இடைத்தரகர்களின்றி ஒரே விலையில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தலைவர் டி.எம்.கே.பி தென்னகோன் நேற்று தெரிவித்தார்.

" கிராமத்திலுள்ள மக்களின் கைகளில் அதிக விலைக்கு அரிசி கிடைப்பதற்கு இடைத்தரகர்களின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன. எனவேதான் இடைத்தரகர்களின் செயற்பாடுகளன்றி லங்கா சதொச பிராந்திய முகாமையளர்களிடமிருந்து வர்த்தக சங்கத்தினரால் நேரடியாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது." என்றும் அவர் கூறினார்.

தற்போது வெள்ளைப் பச்சை அரிசி 64ரூபாவுக்கும் நாட்டரிசி 74 ரூபாவுக்கும் உடைந்த சம்பா அரிசி 60 ருபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 83 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியே நேற்று நள்ளிரவு முதல் 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அரிசியைத் தொடர்ந்து நெத்தலிக் கருவாடு, செமன் ரின், கிழங்கு, சீனி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகளும் படிப்படியாக குறைக்கப்படுமென்றும் லங்கா சதொச தலைவர் தெரிவித்தார்.

தற்போது அரிசி இறக்குமதிக்காக தாய்லாந்து, இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கேள்விமனு கோரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன்  


Add new comment

Or log in with...