நுவரெலியா, கொழும்பை காரணம் காட்டி தேர்தலை பிற்போட வேண்டாம் | தினகரன்

நுவரெலியா, கொழும்பை காரணம் காட்டி தேர்தலை பிற்போட வேண்டாம்

12 தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அரசிடம் வலியுறுத்து

உள்ளூராட்சி சபைத் தேர்லில் நேர்மையும், திறமையும் வாய்ந்த அபேட்சகர்களை கட்சிகள் நிறுத்தாவிட்டால், புதிய தேர்தல் முறையிலுள்ள நன்மைகளை அடையமுடியாமல் போய்விடுமென பெப்ரல் அமைப்பு உட்பட12 அமைப்புகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன.

அதேவேளை, நுவரெலியா போன்ற இடங்களை காரணங்காட்டி தேர்தலை ஒத்திப்போட வேண்டாமென்றும் அதனை ஒருபுறம் வைத்துவிட்டு தேர்தலை நடத்துமாறும் பொலநறுவை தமன்கடுவை பிரதேசத்தைப் போன்று விரைவான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதே தற்போது அவசியமாவதாகவும் அவ்வமைப்புக்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளன.

‘மார்ச் 12 அமைப்பு’ நேற்று கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. இதன்போது மேற்படி அமைப்புக்கள் கட்சிகளிடமும் அரசாங்கத்திடமும் இந்த வேண்டுகோள்களை விடுத்துள்ளன.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் அதாவுத ஜயவர்த்தன, ஸ்ரீலங்கா ‘ட்ரான்பேரன்ஸி இன்டர்நஷனல்’ அமைப்பின் முகாமையாளர் சஷி டி மெல், சர்வோதய சங்கத்தின் இணைப்பாளர் நிஷாந்த ப்றீத்திராஜ், உள்ளூராட்சி நிறுவனங்களின் பேரவை பணிப்பாளர் ஹேமந்தி குணசேகர, ‘பெல்ற்ரா’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சமன் ஹமன்கொட ஆகியோரே மேற்படி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி:

புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த அரசாங்கமே சமர்ப்பித்திருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அதில் சாதகமான சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. எனினும் தேர்தல் இடம்பெறும் தினத்தை எம்மால் மட்டுமன்றி கடவுளாலும் கூற முடியாத நிலையே உள்ளது.

இந்தப் புதிய தேர்தல் முறை தொகுதி ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய ஒன்று. இதுவொரு சிறந்த விடயமே. இதன் மூலம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறவுள்ளன. இந்த முறை மூலம் விருப்பு வாக்கு முறை இல்லாது போகிறது. எனினும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகின்றன.

இவை சாதகமானதாகவும் அமையலாம். அல்லது பாதகமானதாகவும் அமையலாம். இத்தகைய நிலையில் அரசியல் கட்சிகள் தமக்கான அபேட்சகர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது முக்கியமாகும். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...