கொழும்பிலும் புதிய எல்லை நிர்ணயம் | தினகரன்

கொழும்பிலும் புதிய எல்லை நிர்ணயம்

கொழும்பிலும் வெகுவிரைவில் எல்லை நிர்ணயம் முன்னெடுக்கப்படுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்று(17) தெரிவித்தார்.

யுத்தத்துக்குப் பின்னர் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் திம்பிரிகஸ்சாய ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் குடியேற்றம் அதிகரித்திருப்பதால் அவர்களின் குடியிருப்பு தொடர்பான உரிமைப் பிரச்சினை தற்போது தலைதூக்கியிருப்பதாகவும் அமைச்சர் அபேவர்தன சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (17) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சனத்தொகை மற்றும் அவர்கள் குடியிருக்கும் பரப்பளவு அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை எல்லை நிர்ணயம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு அதிக காலம் முறையான எல்லை நிர்ணயம் முன்னெடுக்கப் படவில்லை. இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எல்லை நிர்ணயம் முன்னெடுக்கப்படவில்லை. 2012 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட எல்லைநிர்ணயம் முறைப்படி செயற்படுத்தப்படாததால் அதனை வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்பட முடியாத நிலை உருவானது. எனவே இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய எல்லை நிர்ணயக்குழுவானது அண்மைக்காலமாக சனத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் புதிய எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கொழும்பில் விசேடமாக வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை மற்றும் திம்பிரிகஸ்சாய ஆகிய பகுதிகளில் புதிய எல்லை நிர்ணயம் செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

"மட்டக்குளியில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. திம்பிரிகஸ்யாயவில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு தொடக்கம் ஐந்து ஆயிரம் பேர் வரை வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கைவிடப்பட்ட மக்கள் மற்றும் வேறு காரணங்களுக்காகவும் பெருந்தொகையான தமிழ் மக்கள் இப்பிரதேசங்களில் குடியேறியுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் சொந்த இடம் பற்றிய உரிமைப் பிரச்சினை எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

எனினும் கடந்த 10 வருடங்களாக நாம் எல்லை நிர்ணயத்தை முறைப்படி முன்னெடுக்காததால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அமைச்சினால் நியமிக்கப்படவுள்ள புதிய எல்லை நிர்ணயக்குழு இப்பிரச்சினை தொடர்பில் செயற்படும். இதன் மூலம் எதிர்வரும் 02 அல்லது 03 வருடங்களுக்குள் நாட்டின் எல்லைப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன் 

 


Add new comment

Or log in with...