சபாநாயகரின் அதிகாரத்திற்கு அப்பால் பொலிஸார் செயற்பட முடியாது | தினகரன்

சபாநாயகரின் அதிகாரத்திற்கு அப்பால் பொலிஸார் செயற்பட முடியாது

ஆர்ப்பாட்டம் செய்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முடியாது. சபாநாயகரின் அதிகாரத்திற்கு அப்பால் நீதிமன்றத்திற்கோ, பொலிஸாருக்கோ செயற்பட முடியாதென எதிர்த்தரப்பினர் நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் ஒருபோதும் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக எம்.பிக்கள் கைது செய்யப்பட்டது கிடையாதெனவும் ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பில் தவறான முன்மாதிரியே இடம்பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஹம்பாந்தோட்டையில் பொது எதிரணி நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வி எழுப்பினார்.இதன் போது எதிரணி எம்.பிக்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி குறிப்பிட்டதாவது:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டங்கள் ,ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க உரிமை இருக்கிறது.அதனை அவர்கள் அனுபவித்து வந்துள்ளனர்.ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.பி.சானக்க ஆகியோர் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுடன் ஊடகவியலாளர், மூதாட்டி போன்றோரும் கைதாகினர். இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

மக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமையுள்ளது. ஹர்த்தால் செய்த எம்.பிக்கள் இதற்கு முன்னர் கைதானது கிடையாது.1987 இல் ஊரடங்கு சட்டம் அமுலாகியிருந்த நிலையில் கூட எம்.பிக்கள் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் ஜே.ஆர்.அரசு அவர்களை கைது செய்யவில்லை. எம்.பிக்கள் அமைதியான போராட்டம் நடத்துகையில் சட்டம் செல்லுபடியாகாது. சபாநாயகரை தாண்டி பொலிஸார் செயற்படுகின்றனர்.

பந்துல குணவர்தன எம்.பி

"லோ' மேக்கர்கள் இன்று "டீ" மேக்கர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டம் செய்ததற்காக எம்.பிக்கள் கைதான வரலாறு இதற்கு முன்னர் இருக்கவில்லை. சபாநாயகருக்கு மேல் சென்று பொலிஸார் செயற்படுவது குறித்து சபாநாயகர் வெட்கப்பட வேண்டும்.

வாசு தேவ நாணயக்கார எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதானால் அதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என நீங்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தாலும் அவர்கள் அந்த ஆலோசனையை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டினாலும் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கியிருக்கவில்லை.

பாராளுமன்றத்தை விட உயர்வாக நீதிமன்றம் இருக்க முடியாது. சமமான இடத்தில் தான் இரண்டும் இருக்கின்றன.

குமார வெல்கம எம்.பி

நீதிமன்ற உத்தரவை மீறியதால் இவர்களை கைது செய்ததாக குறிப்பிடப்படுகிறது.யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கியிருந்தது. ஆனாலும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஜனாதிபதியும் அந்த இடத்துக்கு சென்றிருந்தார். ஆனால் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வடக்கில் ஒருசட்டம் தெற்கில் ஒரு சட்டம் செயற்படுத்தப்புகிறதா? இப்பொழுதே பெடரல் வழங்கப்பட்டு விட்டதா?

முஜீபுர் ரஹ்மான் எம்.பி

நீதிமன்ற உத்தரவை மீறியதாலே எம்.பிக்கள் கைதானார்கள்.

அநுரகுமார திசானாயக்க (ஜே.வி.பி எம்.பி)

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை இருக்கிறது. 2010 ஆம்ஆண்டு காலியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது விஜித ஹேரத் எம்.பி கைது செய்யப்பட்டது மட்டுமன்றி பொலிஸாரினால் தாக்கப்பட்டார். கடந்த கரும்புள்ளி வரலாற்றை மாற்றி புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டாலும் அதே நிலைமையே இன்றும் தொடர்கிறது. இதனை தடுக்க சபாநாயகர் நவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...