தீபாவளியின் ஒளிச்சுடர் புரிந்துணர்வை மேம்படுத்தும் | தினகரன்

தீபாவளியின் ஒளிச்சுடர் புரிந்துணர்வை மேம்படுத்தும்

சாதி, மத வேறுபாடுகளை களைந்து உள்ளங்களில் ஞான ஒளி ஏற்றி ஆழமான பிணைப்பு, புரிந்துணர்வுடன் வாழ தீபாவளி யதார்த்தங்கள் உதவுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உலக வாழ் இந்துக்கள் தமது சமய வழிகாட்டல்களுக்கு அமைவாக தீமை மற்றும் அறியாமை ஆகிய இருளை விட்டகன்று ஞான ஒளியேற்றி தமது உள்ளங்கள், இல்லங்கள், கோவில்களை அலங்கரித்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதையிட்டு பெரிதும் மகிழ்வடைகின்றேன். சகல மனிதர்களும் இருளிலிருந்து விலகி ஒளியை நோக்கி செல்வதற்கே முயல்கின்றனர். மனிதன் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஒளியை அடிப்படையாகக் கொண்டே அமைத்துக் கொள்கிறான். மனிதனின் ஆன்மீக, லௌகீக வாழ்க்கைகளுக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது.

தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. இதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக இந்த தீப ஒளி அமைய வேண்டும் இதுவே எனது பிரார்த்தனை.

ஒற்றுமையென்பது நமது நாட்டிற்கு மாத்திரமன்றி முழு உலகத்திற்கும் கட்டாயத் தேவையாகும். இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மத, சாதி என பிரிவதற்கு பதிலாக, சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்புமிக்க புரிந்துணர்வை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே எனது எண்ணம்.

அந்தவகையில் இலங்கையர்களினாலும் உலகவாழ் இந்துக்களினாலும் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபத் திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி,சுபீட்சத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

 


Add new comment

Or log in with...