Friday, March 29, 2024
Home » ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வேண்டுகோள்

ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வேண்டுகோள்

by sachintha
October 25, 2023 8:35 am 0 comment

மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மாகாண ஆளுநருக்கு இராஜாங்க அமைச்சர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க அலுவலகங்களில் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டமைக்கமைய, பொதுமக்கள் அத்தினத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருவது வழக்கமாக உள்ளது. எனினும், மத்திய மாகாணத்தில் அத்தினத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வெவ்வேறு பணிகள் பணிக்கப்படுவதாலும், செயலமர்வுகள் மற்றும் முக்கிய கூட்டங்களில் அவர்கள் பங்கேற்பதாலும் அரசாங்க அலுவலகங்களுக்கு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில், ஏமாற்றத்துடன் அம்மக்கள் வீடு திரும்பும் சந்தர்ப்பங்களும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அரசாங்க அலுவலகங்களையும் அலுவலர்களையும் நம்பி வரும் பொதுமக்கள் ஏமாறக்கூடாதென்பது எனது நிலைப்பாடு. எனவே, பொதுமக்கள் தொடர்பாடல் தினமான திங்கட்கிழமையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையோ, அலுவலர்கள் பங்குபற்றும் கூட்டங்கள், செயலமர்வுகளை அத்தினத்தில் நடத்தாமல் தவிர்க்க மத்திய மாகாண ஆளுநர் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT