பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டாதது துரோகம்; திமுக, அதிமுக மன்னிப்பு கோர வேண்டும் | தினகரன்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டாதது துரோகம்; திமுக, அதிமுக மன்னிப்பு கோர வேண்டும்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதில் திமுக, அதிமுக அரசுகள் ஆர்வம் காட்டாததால் பாலாற்றில் வெள்ளம் ஓடினால் கூட, அது ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இந்த அவலநிலைக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்; தங்களின் துரோகத்திற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்து, தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மணல் மீது காட்டிய பாசத்தை மக்கள் மீது காட்டத் தவறிய திராவிடக் கட்சிகளின் அரசுகளால் பாலாற்றில் வெள்ளமென பாயும் நீர் வீணாக கடலில் கலக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. வராது வந்த மாமணியாக பாலாற்றில் வந்த வெள்ளநீரை பாசனத்திற்கு பயன்படுத்த ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு தவறி விட்டதால், கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பாலாற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள போதிலும், அவற்றையெல்லாம் கடந்து தமிழகப் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 40 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபுறமிருக்க, அதன் பயன்களை அறுவடை செய்வதிலும் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம்.

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் அதன் பாசனப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. நீர் நிலைகளில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த அவலங்களுக்கு காரணம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படாததும், விலைமதிப்பற்ற இயற்கை வளமான பாலாற்று மணலை இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளும் போட்டிப்போட்டுக் கொண்டு சுரண்டி கொள்ளையடித்ததும் தான்.

கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் 93 கி.மீ தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவும் ஓடும் பாலாற்றின் குறுக்கே முறையே 18 தடுப்பணைகளும், 22 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 222 கி.மீ. பாயும் தமிழகத்தில் ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்ட வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி, அது தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மணல் கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திமுக & அதிமுக அரசுகள் தடுப்பணை கட்டுவது பற்றி சிந்திக்கக்கூட இல்லை.

அதன் விளைவு தான் பாலாற்று வெள்ளம் மூலம் விவசாயத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டிய தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் வீணாக கடலில் கலந்த பாலாற்று நீரின் அளவு சுமார் 5 டி.எம்.சி. இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பாலாற்றில் தடுப்பணைக் கட்டக்கோரி கடந்த 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்களை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பா.ம.க. அளித்திருக்கிறது. அப்போதெல்லாம் அதிகாரிகள் தரப்பில் எங்களிடம் கூறப்பட்ட பதில், ‘‘பாலாற்றில் நீர் வரத்து குறைந்து விட்டதால் அதன் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் எந்த பயனும் இல்லை’’ என்பதுதான். 


Add new comment

Or log in with...