நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிரசன்ன ரணவீர எம்.பி. உள்ளிட்ட 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, டி.வி. ஷானக, தென் மாகாணசபை உறுப்பினர் சம்பத் அதுகோரள உள்ளிட்ட 08 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் அம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்று (16) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 40 பேரில் 8 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர் பாலி கொடிகார, மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 32 பேருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று (16) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முற்கொள்ளப்பட்டிருந்தது, இவ்வார்ப்பட்டத்திற்கு நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடந்த 10 ஆம் திகதி, வாக்கு மூலம் வழங்குவதற்காக அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு  அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ, பிரசன்ன ரணவீர, டி.வி. ஷானக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உபாலி கொடிகார, சம்பத் அதுகோரள ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள், தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் இணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 


Add new comment

Or log in with...