கைதிகளின் விடுதலையை இழுத்தடிக்க வேண்டாம் | தினகரன்

கைதிகளின் விடுதலையை இழுத்தடிக்க வேண்டாம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் மேலும் இழுத்தடிக்காது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கைதிகள் விவகாரம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பு ஏற்படுத்துவதிலும் தடையாக இருப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று அரசியல் கைதிகள் தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் கைதிகள் தொடர்பான சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

இவ்வாறான நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகும். அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது. இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் எல்லோருமே கைது செய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையென்பதாகக் கருத முடியாது. அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...