சமூகத்தில் பிரபல்யம் பெற உதவும் பண்புகள் | தினகரன்

சமூகத்தில் பிரபல்யம் பெற உதவும் பண்புகள்

எமது குடும்பத்தினர், சமவயதினர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர்களாக இருக்கவே நாமெல்லோரும் விரும்புகின்றோம். ஆயினும் சமூகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் விரும்பப்படுவர்களாக எம்மை ஆக்கிவிடும் சாதாரண துப்புகளை எம்மில் ஒருசிலரே அறிந்து வைத்துள்ளனர். எம்மைவிட பிரபல்யம் பெற்றுள்ளவர்களை நாம் வழமையாக பாராட்டுவதும் சில வேளைகளில் அவர்கள் மீது பொறாமைப்படுவதும் வழமையாகும்.

நீங்கள் சமூகத்தில் பிரபல்யம் பெற்றவராகத் திகழ விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில இலகுவான துப்புகளைப் பின்பற்றுவது மட்டும்தான். பின்வரும் இலகுவான துப்புகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். அப்புறம் நீங்களும் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பது நிச்சயம்தான்.

பொதுவாக, எமது சமூகத்தில் அதிகளவில் பிரபல்யம் பெற்றவர்கள் பலர் தமக்குப் பழக்கமானவர்களுடன் தமது ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வதில் அவசரம் காட்டி வருகின்றனர். ஒரு புத்தகமாக இருந்தாலென்ன அல்லது உணவாக இருந்தாலென்ன, அவர்கள் தமக்குரியனவற்றை தம்மைச் சுற்றி இருப்போருடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றனர். அத்துடன் இத்தகைய பொருட்களை அவர்கள் அன்பளிப்பொன்றாக அல்லது கடனாக கூட மகிழ்ச்சியுடன் கொடுப்பதனையும் நாம் அன்றாடம் காண்கிறோம்.

புகழ்பெற்று விளங்கும் மனிதர்கள் தமது இன்ப துன்பங்களையும் தமது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர். தமது நண்பர்கள் பிரச்சினையொன்றில் மாட்டிக்கொள்ளும் போது அவர்கள் அனுதாபம் தெரிவிப்பதுடன், மற்றவர்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய கணங்களில் அவர்களைப் பாராட்டி மகிழ்வதில் எப்போதுமே முதலிடம் பெற முயற்சித்தும் வருகின்றனர்.

இத்தகைய சிறிய செயற்பாடுகள் உங்களை அவர்களுடைய இதயங்களில் குடியமர்த்திவிடும்.

நியாயமான கருத்தை வெளிப்படுத்தும் மென்மையான குரலொன்று, உரத்த குரலொன்றைக் காட்டிலும் அதிகம் பயன்தரவல்லது என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்., மென்மையாகக் கதைப்போருடன் பேசும்போது அனைவரும் சௌகரியத்தை உணர்ந்து கொள்வதால் அத்தகையோர் வழமையாக பிரசித்தி பெற்றவர்களாகவே திகழ்கின்றனர்.

நற்பண்பு எப்போதும் பரிசளிக்கும்

நற்பண்புள்ளவராக இருத்தலே ஒருவரின் மனதை வெல்வதற்கான சுலபமான வழியாகும். அறையொன்றுக்குள் நுழையும் போது அல்லது காரொன்றில் ஏறும்போது கதவைத் திறந்தபடி பிடித்துக்கொள்வது, பஸ் ஒன்றில் இடம் கிடைக்காத முதியவர் ஒருவருக்கு உங்கள் ஆசனத்தை வழங்குவது அல்லது அறைக்குள் உங்களை விட வயது கூடிய ஒருவர் நுழையும்போது எழுந்து நிற்பது போன்ற நற்பண்புகளாக அது அமையலாம். இவை அனைத்தும் மக்கள் சுலபமாக மறந்துவிட முடியாத அன்பை உண்டாக்கும் சமிக்ஜைகளாகும்.

நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் அவர்களை வாழ்த்தும் முதலாவது நபராக இருக்கவே எப்போதும் முயற்சி செய்யுங்கள். அவர்களின் செயற்பாடுகளில் அதீத அக்கறை காட்டுவதுடன் நீங்கள் அவர்களை முக்கியமானவர்களாக மதிக்கின்றீர்களென்பதைக் காண்பிக்கும் வகையில் அவர்களிடம் சாதாரண கேள்விகளைக் கேளுங்கள். எவராவது கதைத்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் கூறுவதை பண்பான முறையில் செவிமடுப்பதுடன் அதில் எப்போதுமே குறுக்கிடாதீர்கள். கலந்துரையாடல் ஒன்றில் நீங்கள் ஈடுபடும் போது உங்கள் முறை வரும் வரை காத்திருங்கள்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்திருங்கள் “உங்களுக்கு நன்றி”, “தயவுசெய்து” மற்றும் “வருத்தப்படுகின்றேன்” ஆகிய மாயாஜால சொற்பிரயோகங்கள் நற்பண்பின் தொட்டிற் பழக்க அடையாளங்களாகும்.

மற்றையோரின் மனங்களை எளிதில் வசீகரித்துவிடும் இத்தகைய சொற்களை நாளாந்தம் பாவித்து வருதல் சமூகத்தில் உங்களை பிரபல்யமானவராக உயர்த்திவிடுமென்பதில் ஐயமில்லை.

நல்லதோர் உற்றுக்கேட்பவராக

இருங்கள்

எம்மில் அதிகளவானோர் எமது சொந்தக் குரலை நேசிப்பவர்களாக காணப்படுகின்றோம். எமது நண்பர்கள், சமவயதுடையவர்கள் சொல்ல வருவதை உற்றுக் கேட்பதற்குப் பதிலாக, எம்மைச் சுற்றியுள்ளவர்கள் எமது பேச்சில் ஆர்வம் காட்டுகின்றார்களா அல்லது இல்லையா என்பதைக் கவனிக்காது நாம் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம்.

அநேகமான வேளைகளில், எம்மைச் சுற்றியுள்ளவர்களின் உரையாடல்களில் நாம் கரிசனை காட்டுவது சிறந்ததோர் பண்பாகும். அவர்களின் பேச்சில் கரிசனைகாட்டி உற்றுக் கேட்கும் போது நிறையக் கற்றுக்கொள்கின்றோம்.

நண்பர்களது பிரச்சினைகள் பற்றி கதைக்கும், நாம் அதனைக் கவனமாக உற்றுக் கேட்டால் மட்டுமே, எம்மால் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தேவைப்படுமிடத்து ஆறுதல் வார்த்தைகளையோ அல்லது அறிவுரைகளையோ அவர்களுக்கு வழங்கக் கூடியதாகவிருக்கும்.

புன்னகை பூத்தவாறு உலகத்திற்கு

ஒளியேற்றுங்கள்

புதிய ஆசிரியை ஒருவர் தனது முகத்தில் புன்னகை பூத்தவாறு வகுப்புக்குள் நுழையும் போது அந்தக் கணத்தில் நீங்கள் அவர் மீது ஏன் அன்பு செலுத்த விரும்புகிறீர்கள் என்பது குறித்து நீங்கள் எப்போதாவது வியந்ததுண்டா? நாம் விருந்தொன்றுக்கு அல்லது திருமண வைபவத்திற்குச் செல்லும் போது அங்கு ஒரு சிலரை அறிந்துகொள்கின்றோம். குறித்த நிகழ்விடத்தைச் சென்றடைந்ததும் ஆசனமொன்றை தேடிப் பார்க்கும் போது புன்னகை பூக்கும் எமது சுபாவத்தின் மூலம் நாம் மற்றவர்களால் கவரப்பட்டு விடுகின்றோம். தனது முகத்தில் புன்னகையொன்றை தவழவிட்டபடி இருக்கும் மருத்துவரொருவர் எமது மனங்களில் இலகுவில் இடம்பிடித்து விடுகின்றார் அல்லவா?

புன்னகைக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி இருப்பதனை நினைவில் வைத்திருங்கள். எம்மைச் சுற்றியுள்ளவர்களைச் சுண்டியிழுக்கும் மந்திரசக்தி வாய்ந்த புன்னகையை உங்கள் சொத்தாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் புன்னகை செய்ய விரும்பாவிட்டாலும்கூட, புன்னகை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக நாம் சிடுமூஞ்சிகளாக இருந்தால் பிரச்சினை தீரப் போவதில்லை.

எந்த நாளும் முகத்தில் கோபக்குறி காட்டுபவர்களைக் காட்டிலும் புன்னகை தவழும் முகத்தை உடையோர் நிச்சயமாக அதிகளவில் பிரச்சித்திபெற்றவர்களாகவே திகழ்கின்றனர். ஆமாம்! நாம் பொன் நகையை அணிவதிலும் பார்க்க புன்னகையொன்றை உங்கள் முகங்களில் தவழ விடுவதன் மூலம் சமூகத்தில் பிரபல்யமொன்றாக நீங்கள் நிச்சயம் பிரகாசிப்பீர்கள்.

உதவி மனப்பான்மை

உள்ளவராகத் திகழுங்கள்

எம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் உதவிக்கரம் நீட்டுதல் அன்பைக் கூட்டும் பழக்கமாகும். நீங்கள் உங்களுடன் வகுப்பில் ஒன்றாகப் படித்துவரும் சக மாணவன்/ மாணவியொருவருக்கு கஷ்டமான பாடங்களில் உதவிசெய்யலாம். உங்கள் தாயாருக்கு அவரது அன்றாட வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள், உங்கள் உடன் பிறந்த இளைய சகோதரனின் / சகோதரியின் சேம நலத்தைக் கவனியுங்கள் அல்லது உங்கள் பாட்டன் பாட்டிக்கு அல்லது அயலில் உள்ள முதியோருக்கு எடுபிடி வேலைகள் செய்யுங்கள்.

கணனிகளையும் செல்லிடத் தொலைபேசிகளையும் கையாள்வதில் நீங்கள் உங்கள் பெற்றோரையும், பாட்டன் பாட்டியையும் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் திரும்பத் திரும்ப உதவி கேட்டால் “மாட்டேன்”, “முடியாது” என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். மற்றவர்களுக்கு விரைந்து உதவிசெய்வதென்பது ஒருவரை பிரபல்யமாக்கிவிடும் எளிமையான தன்மையொன்றாகும். 


Add new comment

Or log in with...