நடக்காத ஒன்றுக்கு வாதப்பிரதிவாதம் எதற்கு? | தினகரன்

நடக்காத ஒன்றுக்கு வாதப்பிரதிவாதம் எதற்கு?

 

உத்தேச அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலை யில் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் தொடர் வாதப்பிரதிவாதங்கள் உச்சக்கட்டத்தில் காணப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பில் சிலர் கனவுலகில் இருந்துகொண்டு அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த இடைக்கால அறிக்கையை பொதுப்படையாக வைத்துப் பரிசீலிப்பதை விடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்துவிட்டு விமர்சிப்பதில் தான் இவர்கள் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

இந்த இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை புறமொதுக்கிய நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் அறிக்கைக்குள் உள்வாங்கப்படாத சில விடயங்களைத் தூக்கிப் பிடித்து விவாதித்துக் கொண்டிருப்பதையும் அறிக்கை விடுத்துக்கொண்டிருப்பதையுமே காணக்கூடியதாக உள்ளது.

அறிக்கைக்குள் வராத குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை. ஆனால் முதலில் அதில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றிலுள்ள குறை நிறைகளைத் தெரிவிப்பதோடு இணைந்ததாக சிறுபான்மை சமூகம் எதிர்பார்க்கும் விடயங்களையும் முன்வைப்பதன் மூலம் அதனை அர்த்தபூர்வமானதாக நோக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த இடைக்கால அறிக்கை வருவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென்பதை அழுத்தமாக முன்வைத்து வந்துள்ள நிலையில் அதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளனர். இன்றும் அதே நிலைப்பாட்டையே தமிழ்க் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமானால் முஸ்லிம்களுக்கு தனியான அலகு, அல்லது கரையோர மாவட்டத்தைத் தர வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கையாக முன்வைக்கின்றது ஆனால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்றவை கடுமையாக எதிர்த்திருக்கின்றன. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவே கூடாது என அவை உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் அரசியலமைப்பின் உள்ளடக்கம். அதில் முஸ்லிம் சமூத்தின் அபிலாஷைகளை உள்ளடக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் கட்சிகளும், பொது அமைப்புகளும், பள்ளிவாசல் சம்மேளனங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் நடத்தி வருகின்றன. இதனை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொண்டாலும், இவற்றை தனித்தனியே முன்னெடுக்கப்படுவதை விட அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக இயங்கி ஒத்த நிலைப்பாட்டை முன்வைப்பார்களானால் அது பயனளிக்கக்கூடிடயதாக அமையும் என்பதில் மறுபேச்சுக்கு இடமிருக்காது.

அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் பொது அமைப்புகளும் மேற்கொள்ளும் பணிகள் மெச்சத்தக்கதாக இருந்த போதிலும் அவை ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுக்கப்படுவதால் எவராலும் திருப்திப்பட முடியாத வகையில் பெறுமதியற்றதாகவே ஓரங்கட்டப்பட்டுவிடுகிறது. சுய அரசியல் நலன்களை மட்டும் மனதில் கொண்டு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதப் போக்குடன் செயற்பட முனைவதை சமூகம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. கடந்த காலங்களில் தாம் பிளவுபட்டுச் செயற்பட்டதன் பலாபலன்களை சமூகம் நன்கறிந்து வைத்துள்ளது. சமூகத்தின் அபிலாஷைகளை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முயற்சிப்பதை எந்த விதத்திலும் அங்கீகரிக்க முடியாது.

வடக்கு கிழக்கு இணைப்பு, தனியலகு என்ற கோரிக்கைகள், அதனை கடுமையாக எதிர்க்கும் விமர்சனங்கள் இன்று தேவையானது தானா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வி எழும்புவதற்கு முக்கிய காரணியொன்று பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்த பின்னரும் ஒன்றுமே தெரியாதது மாதிரி அப்பாவி மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பது விசனிக்கத்தக்கதாகும்.

அரசியலமைப்பு, குறித்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்திருக்கும் கூற்றுப் படி அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து எதுவும் உள்வாங்க்பபடவில்லை.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்போ, தனியலகோ எதுவுமே நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கும் போது இல்லாத ஒன்றுக்கு ஏன் வாதப்பிரதிவாதங்களை நடத்தி காலத்தை வீணடிக்க வேண்டும். மக்களை எதற்காக தவறாக வழிநடத்த முற்பட வேண்டும் என்ற கேள்வி நியாயமானதொன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

இல்லாத ஒன்றுக்காக முட்டிமோதிக்கொண்டிருப்பதைவிட உத்தேச அரசியல் யாப்பில் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளை உள்வாங்கப்படுவதற்குரிய அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தனித்து நின்று சாதிக்க முடியாது அனைத்துத் தரப்புகளும் ஒன்றுபட்டு ஒரே முடிவாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனித்தனி முகாம்களுக்குள் நின்று கொண்டு செயற்படுவது சமூகத்தின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த முரண்பாட்டு அரசியலிலிருந்து விடுபட்டு உடன்பாடு காணக்கூடிய பாதையை திறப்பதற்கான முயற்சிகளில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிவில் சமூகத்தின் அழுத்தம் ஒன்றே இவர்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரே வழி.


Add new comment

Or log in with...