சியம்பலாவெவ வன பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் பலி | தினகரன்

சியம்பலாவெவ வன பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் பலி

 
கருவலகஸ்வெவ சியம்பலாவெவ பாகாக்கப்பட்ட வன பிரதேசத்தில் இன்று (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 
 
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த லெனின் ரொசான் (18) மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையான பியல் ரத்னசிரி (31) ஆகிய இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களாவர். 
 
 
ஆறு பேர் கொண்ட குழுவினராக இன்று (12) அதிகாலை சியம்பலாவெவ பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மரம் வெட்டிக் கொண்டிருந்தோர் மீது, வேட்டைக்காகச் சென்றவர்கள் என கருதப்படும் மற்றுமொரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
 
மிருகங்களைக் குறி வைத்துக் கொண்டிருந்தவர்கள் காட்டினுள் மறைந்திருந்தவர்களின் அசைவை அவதானித்து அத்திசையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம் என்றும் தம்மைக் கைது செய்வதற்காக பொலிஸாரோ அல்லது வேறு எவரோ வந்துள்ளதாக நினைத்து இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நம்புகின்றனர்.
 
மரம் வெட்டுவதற்காகச் சென்று மறைந்திருந்தவர்களின் இருவர் மீது துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்து அவர்கள் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
 
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு துப்பாக்கிச் சூட்டில் அகப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் உடனடியாக லொறி ஒன்றின் மூலம் அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலை நோக்கிக் கொண்டு சென்ற வழியில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இச்சம்பவத்தின் பின்னர் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவினர் மற்றும் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினரும் அப்பிரதேசம் முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
 
 
இதன் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் ஏனையவர்களால் வெட்டப்பட்ட மரங்களும், கையடக்கத் தொலைபேசி ஒன்று, ஆடைகள், ஒரு சோடி செருப்பு போன்றவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
 
 
இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ப்பட்டு வருவதோடு, பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவின் உத்தரவில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே. ஏ. சந்திரசேனவின் கண்காணிப்பில் வண்ணாத்திவில்லு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த நாணயக்கார தலைமையிலான பல குழுக்கள் நியமிக்கப்பட்டு இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
 
 

Add new comment

Or log in with...