80வது அகவையில் அமைச்சர் பௌஸி | தினகரன்

80வது அகவையில் அமைச்சர் பௌஸி

தேசிய அரசியலில் நாட்டின் அபிவிருத்திக்கும் சகல இன மக்களின் பொதுவாழ்வின் வளர்ச்சிக்கும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும், தேசிய ஒருங்கமைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌசியின் பிறந்த தினம் இன்றாகும். 1937ம் வருடம் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி பிறந்த இவர் தொடர்ந்து 58 வருடகாலம் தனது பணியை ஆற்றி வருகின்றார். 1959ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் மாளிகாவத்தை மாநகர சபை வட்டாரத்துக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு, கிரான்ட்பாஸ் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார்.

1968ம் ஆண்டு கொழும்பு மாநகர உப மேயராகவும், 1970ம் மாநகர மேயராகவும், தனது இளம் வயதிலேயே பதவியேற்று, கொழும்பு நகரில் பல அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தியவர்.

அன்று கொழும்பில் நகரெங்கும் அலங்கரித்த எரிந்த லாம்பு விளக்குகளை நீக்கி, மின் விளக்குகளை அறிமுகப்படுத்தியவர். ஒவ்வொரு தோட்டங்களின் அருகில் நீர்க்குழாய்களை பொருத்தி பொதுமக்களின் நலனுக்காக அன்றிருந்த சட்டங்களுக்கு மாறாக செயல்பட்டார். மக்களுக்கு நீர் வழங்கியமைக்காக 1977ல் பதவியேற்ற ஐக்கிய தேசிய அரசில் குற்றஞ்சாட்டப்பட்டு, 07 வருட காலம் சிவில் உரிமை பறிக்கப்பட்டு அரசியலிருந்து ஒதுங்கினார். எனினும் அவரது அயராத உழைப்பு கொழும்பு வாழ் மக்கள் மேயர் பௌசியை மறக்கவோ, ஒதுக்கவோ இல்லை. 1992ல் நடைபெற்ற கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சுயேச்சை அபேட்சகராக போட்டியிட்ட அவர் 60, 000 வாக்குகளை பெற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் விளங்கிய கொழும்பு மாநகரில் மேயர் பௌசி பெரும்பான்மையான விருப்பு வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.

1974ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் மேயராக இருந்தபோது, ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியில் இணைந்து, மாநர சபையில் 14 அங்கத்தவர்களை தன்பக்கம் சரியச் செய்து நம்பிக்கைப் பிரேரணையை வென்றவர். கொழும்பு மாநகரின் முதலாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேயராக பதவி வகித்தவர்.

1993ம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய மேயர் பௌசி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த மாகாண சபையின் போக்குவரத்து, வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்தார். மாகாண அமைச்சர் பௌசி, சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் சுகாதார, சமூக சேவைகள் அமைச்சராக 1994ப் பதவியேற்றார்.

1994 முதல் 2010 வரை நடைபெற்ற சகல தேர்தல்களிலும் வெற்றிபெற்றதுமல்லாமல் 2002ம் ஆண்டுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார். இக்காலகட்டத்தில், சுகாதார, சமூகசேவை, போக்குவரத்து, பெருந்தெருக்கள், பெற்றோலியம், சுற்றாடல், இயற்கை அழிவு சம்பந்தமான பல அமைச்சுக்களை பொறுப்பேற்று திறமையாக செயலபட்டார்.

தனது சுவாழ்வில் இன, மத வேறுபாடுகளை காட்டாது, சகலருக்கும் சமமான சேவையாற்றியதனால் சகல இன மக்களினதும் பாராட்டைப் பெற்றவர்.

தாஹிர்


Add new comment

Or log in with...