3 உள்ளூராட்சி சபை சட்டங்களில் சபாநாயகர் நேற்று கைச்சாத்து | தினகரன்

3 உள்ளூராட்சி சபை சட்டங்களில் சபாநாயகர் நேற்று கைச்சாத்து

உள்ளூராட்சி தேர்தலுடன் தொடர்புள்ள மூன்று உள்ளூராட்சிசபை தேர்தல் திருத்தச் சட்டங்களிலும் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று கையொப்பமிட்டார்.

இந்நிலையில் தேர்தலுடன் தொடர்புள்ள சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு அடுத்த வாரம் உறுப்பினர்கள் தொகை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட இருப்பதாக மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. உள்ளூராட்சிசபை தேர்தலுடன் தொடர்புள்ள பிரதேச மற்றும் நகர சபை, மாநகர சபை தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து கையெழுத்திட்டார்.

அதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சபாநாயகர், உள்ளூராட்சி தேர்தலுக்கான தொகுதிகள் மற்றும் எல்லைநிர்ணயம் என்பன அமைக்கப்பட்டு பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டு இந்த சட்டங்கள் திருத்தப்பட்டமை இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பமாகும்.

இந்த மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்படுவதோடு உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்துவதற்காக இருந்த சகல தடைகளும் நீங்கியுள்ளன. உள்ளூராட்சிசபை தேர்தல்களை ஜனவரியில் நடத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்தச் சட்டங்களில் கையெழுத்திட முன்னர் நான் தேர்தல் ஆணைக்குழு தலைவருடனும் எல்லை நிர்ணய தலைவருடனும் பேசினேன். அடுத்த ஜனவரியில் தேர்தல் நடத்த சந்தர்ப்பம் இருப்பதாக அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்றார்

இங்கு கருத்து வெளியிட்ட மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல் முறையை மாற்றுதல்,விருப்பு வாக்கு முறையை மாற்றுதல் என்பன இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பாரிய மாற்றங்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் சட்ட திருத்தத்திற்கு அமைவாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் தொகையை மாற்ற எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சிசபை தேர்தலை ஜனவரி மாதத்திலும் மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...