ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்டமை தொடர்பில் ASP இடமாற்றம் | தினகரன்

ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்டமை தொடர்பில் ASP இடமாற்றம்

 
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்ட்ட ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட முறுகலின்போது, இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
 
 
குறித்த ஆர்ப்பாட்டத்தில், மத்தள விமான நிலையத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்க திட்டமிடுவதாக தெரிவித்து இவ்வார்ப்பட்டம் இடம்பெற்றிருந்தது.
 
இதன்போது தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகரான துஷார தழுவத்த இளைஞர் ஒருவரை தாக்குவது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது.
 
 
குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் 3 எம்பிக்கள் உள்ளிட்ட 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
சுசந்த பண்டார கருணாரத்ன எனும் குறித்த நபர் ஒரு ஊடகவியலாளர் எனவும் அவர், அவ்வார்ப்பாட்டத்தில் பதாதையை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
 
ஊடகவியல் பணிபுரிகின்ற நிலையில், அவர் தாக்கப்படவில்லை எனவும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மாத்திரமன்றி, பொலிசாருடன் முறுகல் நிலையை ஏற்படுத்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
இதேவேளை, நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
 
எந்த தொழிலை செயபவராயினும் ஆர்பாட்டத்தில் பங்கேற்கும் ஒருவர் ஆர்பாட்டக்கார்களில் ஒருவராகவே கருதப்படுவார். 
 
எனினும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதோடு, பொலிஸ் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 

Add new comment

Or log in with...