தமிழ் கைதிகளின் விடுதலைக்காக நாளை வட கிழக்கில் ஹர்த்தால் | தினகரன்

தமிழ் கைதிகளின் விடுதலைக்காக நாளை வட கிழக்கில் ஹர்த்தால்

(வைப்பக படம்)
 
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (13) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 
 
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடந்த திங்கட்கிழமை (09) யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடிக் கலந்துரையாடியதன் அடிப்படையிலேயே ஏகமனதாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
தமது வழக்கினை அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு தற்போது உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சுமார் 16 சிவில் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூரில் ஒன்றுகூடிக் கலந்துரையாடின. 
கலந்துரையாடலின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கான அவசர கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
அந்தக் கடிதத்தில், "அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான ம. சுலக்சன், க. தர்சன், இ. திருவருள் ஆகியோரின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு உரிய காரணங்களின்றி மாற்றப்பட்டுள்ளன. 
 
இதனால், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தாம் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களை கருத்தில் கொண்டே அவ் அரசியல் கைதிகள் உண்ணா விரதமிருந்து  வருகின்றனர்.
 
இவர்களின் நியாயபூர்வமான கோரிக்கை தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவெடுத்து அவர்களது வழக்குகளை உடனடியாக வவுனியா நீதிமன்றுக்கு மீண்டும் மாற்றுமாறும், அது தொடர்பான அறிவித்தலை அந்த அரசியல் கைதிகள் மூவருக்கும் உடனடியாக அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். 
 
மேலும், அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
குறித்த கோரிக்கைக் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து உரிய பதிலெதுவும் வழங்கப்படாததுடன், உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 
 
இந்த நிலையிலேயே நாளை (13) வெள்ளிக்கிழமை வட- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.   
 
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்!
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும்  நாளை (13) நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தாயக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 
இலங்கை ஆசிரியர் சங்கம்
 
உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை (13) நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் நேற்று (11) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ளது.
 
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்!
 
(செல்வநாயகம் ரவிசாந், சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...