அரசியல் கைதிகள் விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? | தினகரன்

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் நீடித்த வண்ணமே காணப்படுகின்றது. அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த விதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விசாரணை என்ற பெயரில் நீண்ட நெடுங்காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. இது ஜனநாயக மரபை மீறுகின்ற ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

காலத்துக்குக் காலம் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. குற்றமற்றவர்கள் விடுவிக்கப்படுவர் என்று கடந்த ஆட்சியிலும், இன்றைய நல்லாட்சியிலும் கூட தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இன்று வரையில் ஒருவரேனும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது அவர்களது வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்து உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகவே உள்ளது. தமிழ்க் கைதிகளை பயங்கரவாதிகள் எனக் கூறுவது பொய்க் குற்றச்சாட்டாகும். இவ்வாறு பொய் கூறி அப்பாவித் தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்து அவர்களது வாழ்க்கையோடு விளையாடக் கூடாது என்று அமைச்சர் ராஜித கூறி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மிக நீண்ட காலமாக தமிழ் இளைஞர்களைத் தடுத்து வைத்திருப்பதை ஒரு பெரிய தண்டனையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அவர்களை தடுத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவதால் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டி இருக்கின்றார். இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தப்பட்டிருப்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணி சட்டத்தில் காணப்படும் தவறுகளே ஆகும். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளை நிவர்த்திக்க அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுவதை மறுத்துரைக்க முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தமிழ்க் கைதிகளில் வழக்குகள் உள்ள கைதிகளை தவிர்த்து ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தடவைகள் வலியுறுத்தப்பட்ட போதிலும், அவை எதுவும் எடுபடாத ஒரு விடயமாகவே தொடர்கின்றது. இந்த அப்பாவித் தமிழ்க் கைதிகள் விடயத்தில் காட்டப்படும் உதாசீனப் போக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவசியமற்ற விதத்தில் அப்பாவி இளைஞர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து அரசு ஏன் சிந்தித்துப் பார்க்க மறுக்கிறது என்ற கேள்வி யதார்த்தமானதாகவே உள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதவர்கள் விடயத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலை அவரது சொந்தக் கருத்தாகக் கொள்வதா அல்லது அரசின் கருத்தாகக் கொள்வதா என்ற முரண்பட்ட போக்கையே காணக் கூடியதாக இருக்கின்றது. அவரது பதிலில் வழக்குகள் இன்றேல் அவர்களை விடுவிக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி பொய் கூறி தொடர்ந்து தடுத்து வைப்பது நியாயமாகாது. அது முறைகேடானதொன்றாகும். மோதல் முடிந்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. இனியும் தாமதப்படுத்துவது உகந்ததல்ல என அவர் கூறியிருக்கிறார். ஆனால் அரசு என்ன முடிவை எடுத்திருக்கின்றது என்பதை அமைச்சர் வெளிப்படுத்தவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தாமதாகிக் கொண்டே போகுமானால் அது மற்றொரு நெருக்கடிக்குக் காரணமாகி விடும். மற்றொரு நெருக்கடிக்குள் சிக்குவதற்கு முன்னர் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு தாமதமின்றி துரிதமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தமிழ்க் கைதிகள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது வடக்கில் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இம்மூவருக்கும் ஆதரவாக பொது அமைப்புகள் வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு வட மாகாண சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றியமையை எதிர்த்து 15 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ்க் கைதிகள் விடயத்தில் உடன் தீர்வுக்கு வழிதேட வேண்டியுள்ளது. இதுவிடயத்தில் விளக்கம் தருமாறு சட்ட மாஅதிபரிடம் ஜனாதிபதி கேட்ட போதிலும் இன்னமும் அதற்கான காலம் கனிந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாட வேண்டிய நிலை நீடிக்கப் போகின்றது? அதனால் அரசு முகம் கொடுக்கப் போகும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? யதார்த்தத்தை உணர்ந்து அரசு துரிதமாகச் செயற்பட வேண்டுமென்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...