அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் அர்த்தமில்லை | தினகரன்

அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் அர்த்தமில்லை

தமிழ் கைதிகளை பயங்கரவாதிகள் என்று கூறி பொய்யாக தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. வழக்கு இல்லாதவர்களை துரிதமாக விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இவர்கள் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இவர்களை விடுவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார். சட்டத்தில் உள்ள தவறினால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து வெ ளியிட்ட அமைச்சர்,

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படவில்லை.ஆனால் இதற்கு முன்னர் இது பற்றி பேசப்பட்டது.இந்த கைதிகளில் வழக்குகள் உள்ள கைதிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஏனையவர்களினும் நிலைப்பாடாக இருந்தது.

இவர்களை தேவையின்றி தடுத்து வைப்பதில் எந்த பயனும் கிடையாது.கடந்த காலத்தில் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.ஜே.வி.பியின் முதலாவது கலவரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களே தான் ஜே.வி.பிக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். புலிகள் இயக்கத்திலும் அவ்வாறான நிலையே ஏற்பட்டது.

புலிகள் மகளிர் அணித்தலைவி தெரிவித்த விடயங்கள் முக்கியமானவை.

வழக்குத் தொடரக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதா என வினவப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர், வழக்குகள் இன்றேல் அவர்களை விடுவிக்க வேண்டும் .பயங்கரவாதிகள் என்று கூறி பொய்யாக தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது.மோதல்கள் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன.இனியும் தாமதிப்பது உகந்ததல்ல.சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் தாமதம் நடக்கிறது என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கில் சிலர் போராட்டம் நடத்துவது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர்,நாம் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை தாமதிப்பது இனவாதிகளுக்கு அது சந்தர்ப்பமாக அமையும்.அதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் கைதிகள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக பொது அமைப்புகள் வடக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு வடமாகாண சபையில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது. இதே ​வேளை

தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் உடன் விளக்கம் கோரி தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...