மைலோ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டம்: 300 போட்டிகள்; 11 இடங்களில் நடாத்த ஏற்பாடு | தினகரன்

மைலோ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டம்: 300 போட்டிகள்; 11 இடங்களில் நடாத்த ஏற்பாடு

மைலோ நிறுவனம் ஐந்தாவது ஆண்டாக யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் யாழ். உதைபந்தாட்டச் சங்கத்துடன் இணைந்து நடாத்தும் நம் நாட்டின் மிகப் பெரிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றான மைலோ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த- 2013 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தின் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்தக் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் மைலோ வெற்றிக் கிண்ணம்- 2017 போட்டிகள் கடந்த-07 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் நவம்பர் மாதம்- 04 ஆம் திகதி வரை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த வருடத்துக்கான மைலோ வெற்றிக் கிண்ணம் தொடர்பான தொடர்பான செய்தியாளர் கூட்டம் கடந்த- 06 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். ஆஸ்பத்திரி வீதியிலுள்ள US ஹோட்டலில் இடம்பெற்றது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் உபதலைவர் பந்துல எகொடகே தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண விளையாட்டுத் துறை இணைப்பாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான இ. ஆர்னோல்ட், வடமாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திருமதி பி. செல்வின், யாழ். மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கே. விஜிதரன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் எஸ். மோகனதாஸ், யாழ். மாவட்ட உதைப்பந்தாட்டப் பயிற்றுனர் பி. முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் உபதலைவர் பந்துல எகொடகே கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த -2013 ஆம் ஆண்டில் மைலோ வெற்றிக் கிண்ணம் 40 அணிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த- 2014 ஆம் ஆண்டில் இந்தப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 60 வரை அதிகரித்திருந்தது. 2015 ஆம் ஆண்டு நூறு அணிகள் பதிவு செய்த நிலையில் கடந்த- 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 150 அணிகள் இந்தப் போட்டியில் போட்டியிட்டிருந்தன.

இவ்வாண்டு முதன் முறையாக 100 பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுடன் 210 உதைபந்தாட்ட கழகங்களும் கலந்து கொள்ளவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மொத்தமாக 300 போட்டிகள் 11 இடங்களில் இடம்பெறவுள்ளன.

இந்தத் தொடரில் உள்நாட்டு உதைபந்தாட்ட லீக், யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக், வலிகாமம் உதைபந்தாட்ட லீக், வடமராட்சி உதைபந்தாட்ட லீக், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக், மருதங்கேணி உதைபந்தாட்ட லீக் மற்றும் கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக் ஆகியவற்றில் பங்குபற்றிய அணிகளும் போட்டியிடவுள்ளன.

கடந்த- 2016 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டியில் பாடும்மீன் வெற்றி பெற்றிருந்தது. மாபெரும் இறுதிப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம்- 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில்,

மைலோ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடமாகாணத்தில் உதைபந்தாட்டம் வளர்ச்சியடைந்துள்ள போக்கை அவதானிக்க முடிகிறது. எனவே, எதிர்காலத்தில் வடமாகாணத்தில் சிறந்த உதைபந்தாட்ட கழகங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இலைமறை காய்களாகக் காணப்படும் உதைபந்தாட்டக் கழகங்களை ஆர்வத்துடன் போட்டிகளில் பங்குபற்றச் செய்வதற்கு மைலோ வெற்றிக் கிண்ணம் வழி சமைத்திருக்கிறது. எனவே, எமது மாவட்டத்தின் சார்பாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாகவும் இந்தப் போட்டி நிகழ்வை ஒழுங்கமைத்துள்ள நெஸ்லே லங்கா நிறுவனத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ச்சியாக மைலோ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டம் வடமாகாணத்தில் நடாத்தப்பட வேண்டும்.

எமது வீரர்களைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்த இவ்வாறான போட்டிகள் நிச்சயம் வழிவகுக்கும். கடந்த வருடத்தை விட இந்த வருடம் போட்டிக்கான பரிசுத் தொகையை அதிகரித்தால் எங்களது விளையாட்டு வீரர்களுக்கு அது மிகுந்த உந்துசக்தியாக அமையும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்வரும் வருடங்களில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணிகளையும் உள்வாங்கி பரிசுத் தொகையை மேலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

போட்டியின் விதிமுறைகள் மற்றும் பங்குபற்றும் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பில் யாழ். மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கே. விஜிதரன் தெளிவுபடுத்துகையில்,

போட்டியில் பங்குபெறுதல், போட்டிக்கு உரிய நேரத்திற்கு வருகை தருதல், போட்டிக்கு உகந்த உடை அணிந்து பங்குபற்றல், போட்டியில் விளையாட்டு விதிகளையும், நடுவர்களின் தீர்ப்பையும் மதித்து நடாத்தல், போட்டி முடிவடைந்த பின்னர் போட்டி விதிமுறைகளுக்கமைவான ஒழுக்கத்திற்கமைவாக மைதானத்தை விட்டு வெளியேறுதல் ஆகிய ஐந்து அம்சங்களும்

இந்த ஐந்து அம்சங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் தலா-10 புள்ளிகள் என்ற அடிப்படையில் ஒரு போட்டிக்கு மாத்திரம் 50 புள்ளிகள் வழங்கப்படும். அனைத்துப் போட்டிகளுக்கும் தனித்தனியாகப் புள்ளிகள் வழங்கப்பட்டு ஒரு அணி விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் சராசரி கணிக்கப்படும். மிக அதிகமான சராசரிப் புள்ளி பெறுகின்ற அணி தெரிவு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்கான நன்னடத்தை விருது வழங்கப்படும்.

மத்தியஸ்தர்களின் தீர்ப்பை மதித்து நடாத்தலும், போட்டி முடிவடைந்த பின்னர் போட்டி விதி முறைகளுக்கமைவான ஒழுக்கத்திற்கமைவாக மைதானத்தை விட்டு வெளியேறுதல் ஆகிய இரு அம்சங்களில் ஏதாவது ஒன்றில் தவறு இழைக்கப்படும் போது அந்த அணியினருக்கு வழங்கப்படும் புள்ளிகளில் நூறு புள்ளிகள் குறைக்கப்படும். அதாவது இரு போட்டிகளில் ஒரு அணி பெறக் கூடிய முழுமையான புள்ளிகள் ஒரு தவறுக்கான தண்டனையாகக் கணிக்கப்படும்.

போட்டியொன்றின் போது மஞ்சள் அட்டை காட்டப்படும் போது ஐந்து புள்ளிகளும், சிவப்பு அட்டை காட்டப்படும் போது பத்துப் புள்ளிகளும் குறைக்கப்படும். இந்த நடைமுறை போட்டியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்பதற்காக மாத்திரமல்ல. சிறந்த நன்னடத்தையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கிலுமாகும். இதன் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த உதைப்பந்தாட்டச் சமூகத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். சர்வதேச தரம் வாய்ந்த ஐ. பி. எல் போட்டி போன்று மைலோ வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்துப் போட்டி பரிணமித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனவே, வடமாகாணத்தின் உதைபந்தாட்ட தரத்தை உயர்த்துவதற்கான தேவை கருதி அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.

 செல்வநாயகம் ரவிசாந் 


Add new comment

Or log in with...