அன்பு வார்த்தைககளால் அரவணைக்கும் ஓவியா என்கிற ஹெலன் | தினகரன்


அன்பு வார்த்தைககளால் அரவணைக்கும் ஓவியா என்கிற ஹெலன்

‘பேர் ஓவியாவாம். புதுப்பொண்ணு. நல்லா நடிச்சிருக்கு...’ ‘களவாணி’ படத்தின் மூலம் ஓவியா நமக்கு இப்படித்தான் அறிமுகமானார். தொடர்ந்து ‘மெரினா’, ‘கலகலப்பு’... என சில படங்களில் நடித்ததன்மூலம், ‘ஓ.கே இவரும் நடிக்கிறார்’ என்ற அளவே இவரை நாம்  புரிந்துகொண்டோம். ஆனால், ‘ எங்கேயும் எப்போதும் எதற்காகவும் யாருக்காகவும் நடிக்காதவர்’ என்ற அவரின் உண்மை முகத்தை ‘பிக்பாஸ்’ மூலம்தான் தெரிந்துகொண்டோம். 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது அந்த நிகழ்ச்சியைப் பலரும் பார்க்கத் தொடங்கியதற்கு முக்கியமான காரணம் சினேகன் சொன்னதுபோல், அந்த ஒற்றை ஆண் தேவதை கமலுக்காகத்தான். பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி நம் தமிழ் ரசிகர்களுக்குப் புதிதாகத்தான் இருந்தது. முதல் எபிசோடில் போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவரும் கமல்ஹாசன் முன் மேடையில் ஏறி நம்மைப் பார்த்து வணக்கம் சொன்னபோது, இந்த நிகழ்ச்சியைப் பற்றியோ, நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் உண்மை முகம் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. 

ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார எபிசோடுகள் கடந்த நிலையிலேயே, நிகழ்ச்சி நம்மைப் பெரிதும் ஆட்கொண்டு விட்டது. அதற்கு முதல் முழுக் காரணம் நம் அனைவரையும் கவர்ந்த குறும்புச் சிரிப்பின் குத்தகைக்காரி ஓவியா என்ற தேவதை. முதல் எபிசோடில் ஓவியா கமலுடன் கைகுலுக்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றபோது, நிகழ்ச்சியைப் பார்த்த பார்வையாளர்களுக்கும் சரி, விஜய் டிவிக்கும் சரி, அவ்வளவு ஏன், ஓவியாவுக்கே தனது வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்திருக்காது. 

முதல் வாரத்திலேயே கஞ்சா கருப்பை, ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்று சொன்னது, 'இப்போது இங்கிருக்கும் இரண்டு குருவிகள் என்ன கதை பேசுதுனு சொல்லட்டுமா' என்று குருவிகள் மொழியை நமக்கு மொழிபெயர்த்தது, ''பிக் பாஸ் ரொம்பப் பசிக்குது. ஒரு பனானாவும், கீரின் டீயும் கொடுக்க முடியுமா' என்று பிக் பாஸ் குரலிடம் கெஞ்சியது, ''திரும்பிக்கோ, இல்லைனா ஸ்ப்ரே அடிச்சி போட்ருவேன்'' என்று கேமராவிடம் கொஞ்சியது, 'கொக்கு நெட்ட கொக்கு'க்கு ஸ்பெஷல் ட்யூன் போட்டது, தினமும் காலையில் எழுப்பும் சினிமா பாடல்களுக்கு ஆடிவிட்டு, பாட்டு முடியும் தருணம் 'ப்ளையிங் கிஸ்'களை' பறக்க விட்டது...என ஒவ்வொரு நாளும் ஓவியாவைப் பார்த்துவிட்டு உருகினான் தமிழன். 

இப்படி ஒருபுறம் குறும்பும் மறுபுறம் ஆரவ்வின் மீது அன்பும் கொண்டு தனது காதலை ஏற்றுக்கொள்ளச்சொல்லி கேமராக்கள் சூழ அவரிடம் கெஞ்சியபோதும்... மற்ற அத்தனை போட்டியாளர்கள் ஒருபக்கம், இவர் மட்டும் இன்னொருபக்கம் என்று ஒதுக்கிவைக்கப்பட்டபோதும் தன் ரியல் கேரக்டர் மூலம் தனி ஆளாக நின்று தமிழர்களின் மனங்களை வென்றார் இந்தக் கேரளப் பெண். 

ஓவியா

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தது வெறும் 40 நாள்கள்தாம். இவர் வீட்டிலிருந்து வெளியேறிய அன்று ஒளிபரப்பான குறும்படத்தைப்பார்த்து பலர் கண் கலங்கினர். இவர் வீட்டில் இருந்தபோதே சமூக வலைதளங்களில் உருவான ‘ஓவியா ஆர்மி’ மற்ற போட்டியாளர்களைக் கலாய் காமெடிகளில் வச்சு செய்தனர். ஓவியா வெளியேறிய பிறகு அவர்கள் இன்னும் உக்கிரமாகி ஆன்லைனையே தனதாக்கிக்கொண்டு ஜூலி, காயத்ரி... என்று சகலரையும் தங்கள் கலாய் மீம்ஸ்களால் சவட்டி எடுத்தனர்.

ஆனால் வெளியே வந்த ஓவியா, தன் சொந்த ஊர் போய் அப்லோடு பண்ணிய செல்ஃபி வீடியோவில், ‘இவ்வளவு லவ்வை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்காக நீங்க யாரையும் காயப்படுத்தக் கூடாது’ என்று அன்பு காட்டினார். அதைப்பார்த்து இன்னும் இன்றும் கொண்டாடுகிறான் தமிழன். 

அந்தச் சமயத்தில் ஆரம்பித்ததுதான் ஓவியாவைப் பேட்டி எடுக்கும் நம் முயற்சி. அவரின் போன் நம்பர், உதவியாளர்கள் நம்பர், மேனேஜர், சேனல் தரப்பு... என அவரைத் தொடர்பு கொள்ள ஓவியா, ஓவியா 1, ஓவியா 2 என கான்டாக்ட்ஸில் நான் சேமித்து வைத்த நம்பர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்துக்கும் மேல் இருக்கும். நாள்கள் கடந்தன. ஆரவ் டைட்டில் வின் பண்ணினார். ஆனாலும் ஓவியா லைனுக்கு வரவில்லை. ‘பேசக்கூடாதுனு சேனல் அக்ரிமென்ட், ஆரவ்வால் அப்செட்...’ என்று தினம்தினம் வெவ்வேறு பதில்கள். 

‘இன்னைக்கு எப்படியாவது பிடித்துவிடணும்’ என்று நினைத்தபடி எழுந்த அந்த அதிகாலையில் அவரின் மேனேஜரிடமிருந்து வந்து விழுந்தது ஒரு குட்டி மேசேஜ். ‘விகடன் பேட்டி இன்று கன்ஃபார்ம். மேடம் தூங்கிட்டு இருக்காங்க எழுந்ததும் டைம் சொல்றேன்’. அப்போது அதைப்பார்க்கையில், என் போனில் உள்ளவற்றிலே இதுதான் அழகான மெசேஜ் என்று தோன்றியது. அடுத்த ஒரு மணிநேரத்தில், ‘கரெக்டா இரண்டு மணிக்கு. விகடன் அலுவலகத்துக்கே வர்றேன்னாங்க’ என்றது அவரின் அப்டேட் மெசேஜ். 

அடுத்த அரைமணிநேரத்தில் ஓவியாவுக்கான காஸ்ட்யூம் வந்து இறங்கின. காஸ்ட்யூம் டிசைனர் யார் தெரியுமா, த்ரிஷாவின் நண்பரும் அவரின் ஃபேவரைட் காஸ்ட்யூம் டிசைனருமான சிட்னி. அடுத்த அரைமணிநேரத்தில் ஓவியாவின் கார் ஆஃபிஸூக்குள் வந்தது. ‘ஸாரி லேட் ஆகிடுச்சு. சாப்பிட்டீங்களா? நான் சாப்பிட்டேன்’ என்று நம்மை நலம் விசாரித்தபடி உள்ளே வந்தார். ’உடனே போட்டோஷூட் ஆரம்பிச்சிடலாம்’ என்று இதமான டான்ஸ் மூவ்மென்ட்டில் மாடிப்படி ஏறிக்கொண்டே நம்மிடம் பேசினார். 

‘டூ மினிட்ஸ் டைம் கொடுங்க, காஸ்ட்யூம் மாத்திட்டு வந்துடுறேன் சார்’ என்று நம் சீஃப் போட்டோகிராஃபர் ராஜசேகரன் சாரிடம் டைம் கேட்டு சென்றவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆரஞ்சு கலரில் நீளமான லெஹங்கா டிரஸுடன் காட்சியளித்தார். இயல்பான ஓவியாவுக்கு அந்த லெஹங்கா மேலும் அழகு சேர்த்தது. ''ஓகே நான் ரெடி, போலாமா ''என்று கேட்டவர், ‘படையப்பா’ படப் பாடலான ‘மின்சாரக் கண்ணா’ பாடலைத் தன் செல்போனில் ஒலிக்கவிட்டார். ‘என் ப்ளே லிஸ்ட்ல சில பாடல்கள் வெச்சிருக்கேன். வழக்கமா போட்டோஷூட்னா இந்தப் பாடலுக்கு லைட் மூவ்மென்ட் கொடுக்கிறமாதிரி இருந்தாலே நல்ல போஸ் கிடைச்சுடும்னு நினைப்பேன்’ என்றபடி பூக்களின் மீது நடக்கும் நளினத்துடன் போஸ் பண்ணிய ஓவியாவை நோக்கி ராஜசேகரனின் ஃப்ளாஷ் மழை விழ ஆரம்பித்தது. 

ஓவியா

''இந்த போஸ் ஓகே வா, கையை இப்படி வெச்சுக்கவா...' என்று தாராளமாக ஓர் இரண்டு மணிநேரம் போஸ் கொடுத்தவர். ‘அச்சோ டைம் ஆறு ஆச்சா. ஷூட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு,‘போட்டோகிராஃபர் சார், எந்தெந்த போட்டோஸை யூஸ் பண்றீங்கனு என்கிட்ட சொல்லணும். ப்ராமிஸ் பண்ணுங்க. இல்லைனா உங்க தலை வெடிச்சிடும்” என்றதும் என்றும் சிரிக்காத ராஜசேகரன் சாரே அன்று சிரித்துவிட்டார். ‘போட்டோஸ் ஓ.கே. இன்டர்வியூ எப்ப எடுக்கலாம் மேம்’ என்று கேட்டதும் 'கட்டாயம் எடுக்கலாம். எனக்கு ஓ.எம்.ஆர்ல ஷூட். என்கூடவே வாங்க, என் கார்லயே பேசிக்கிட்டே போவோம்’ என்று தன் காரில் நம்மையும் ஏற்றிக்கொண்டார். எந்தக் கேள்வியையும் வேண்டாம் என்று சொல்லாமல் எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே, பதில் தந்தார். 

“ஓவியாவை தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் பார்த்துட்டாங்க. ஹெலனைப் பற்றிச் சொல்லுங்கள்?” என்றதும், “யெஸ். நான்தான். அப்பவும் இப்பவும் அப்படித்தான். மற்றபடி ஹெலன் பற்றிச் சொல்ல பெரிசா விஷயமில்லை. இப்போ முடி வெட்டினதுக்குப்பிறகு கொஞ்சம் டாம் பாய் மாதிரியிருக்கேன். ஐ.எம் ய கேர்ள். நார்மலான பொண்ணு'' என்று குறும்போடு சிரிக்கிறார்.

“ஓவியாவின் இந்த டாம் பாய் ஹேர் ஸ்டைல் ரொம்பப் பிரபலமாகிடுச்சே?” என்றதும் சிரித்தவர், “ஓ, அப்படியா.. நல்லாயிருக்கா, எனக்குப் பிடித்திருந்தது. அதனால் வைத்தேன். பட், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்னு நான் நினைக்கவேயில்லை. பட், எல்லோரும் நல்லாயிருக்குனு சொல்றப்போ வெட்கமா வருது” என்று வெட்கப்பட்டு சிரிக்கிறார். 

“ஓவியா ஆர்மி பற்றி...” என்று கேள்வியை முடிக்கும் முன்பே, “ரொம்ப ஸ்வீட் அவங்க. எனக்காக வீடியோஸ் எல்லாம் போடுறாங்க. என் மேல உயிரா இருக்காங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. என்ன பண்ணப்போறேன்னே தெரியலை...” என்றவரிடம், “பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களை ஆர்டர்படுத்தி நம்பர் கொடுக்க வேண்டுமென்றால், என்ன நம்பர் கொடுப்பீர்கள்?’ என்றேன். “எனக்கு சின்ன வயசிலிருந்தே வரிசைப்படுத்துவது பிடிக்காது. இப்போ பாருங்கள் என் வலது கையில் ஐந்து விரல் இருக்கா, எல்லாம் தனித்தனியா வித்தியாசமா இருக்குல்ல. அது அப்படியிருந்தாதானே நல்லாயிருக்கும். அப்போதுதான் பயன்படும். அதுமாதிரிதான் அவங்க எல்லோரும். டிரைவரா இருந்தாலும் சரி, அம்பானியா இருந்தாலும் சரி இருவரையும் ஒண்ணாத்தான் பார்ப்பேன்” என்கிறார். 

அடுத்து ஆரவ் பற்றிய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். 'ஆரவ் ரொம்ப...’ என்று ஓவியா சொல்ல வாய் திறந்தபோது, ''ஓவியா ப்ளீஸ், ஆரவ் பற்றின கேள்விகள் வேண்டாமே’ என்றார் அவரின் உதவியாளர். '' வொய் நாட்', என்று ஓவியா கேட்க, உதவியாளர் சில காரணங்களைச் சொல்ல, 'சரி ஓகே' என்ற ஓவியா, தன் கண்களாலேயே நம்மிடம் மன்னிப்புக் கோருகிறார்.

“பிக் பாஸ் வீட்ல இருந்து ஏன் பாதியில் வெளியேறினோம்னு என்னைக்காவது ஃபீல் பண்ணினது உண்டா?” என்றதும் கொஞ்சம் யோசித்தவர் தொடர்கிறார். “எனக்கு பிக்பாஸ் அனுபவம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்கு முன் லைஃப்ல ஏதாவது வித்தியாசமா, புது அனுபவம், புதுஅறிவு வேணும்னு நினைச்சேன். அதுக்கு புதிய மனிதர்கள்கூட பழகணும். இப்படி எனக்கு நிறைய ஆசைகள். அந்த ஆசைகள் ஒவ்வொன்றா நிறைவேற்றிக்கிட்டே வர்றேன். 

அந்தச் சமயத்தில்தான் 'பிக் பாஸ்' வாய்ப்பு வந்தது. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி அந்த வீட்டுக்குள்ள இருப்பதே ஓர் அனுபவம். அதனால்தான் ‘பிக் பாஸ்’க்குச் சம்மதிச்சேன். நான் அங்க இருந்த சில நாள்கள்லயே எனக்குத் தேவையான அனுபவம் கிடைச்சிடுச்சு. அது நல்லதோ கெட்டதோ எனக்கொரு பாடத்தைக் கத்துக்கொடுத்திருக்கு.

அந்த வீட்ல இருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வீட்டுக்குள்ள போகணும்னு தோணுச்சு. ஆனால் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே நான் போவதில் என் அப்பாவுக்கு அவ்வளவா விருப்பமில்லை. அங்க நடந்த சில விஷயங்களைப் பார்த்துட்டு அப்பா கொஞ்சம் பயந்துட்டார். வீட்டில் நான், என் பாட்டி, அப்புறம் என் செல்ல நாய்க்குட்டினு நாலு பேர்தாம். அதனால், அவங்க உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது என் கடமை. என்னை நினைத்து அப்பா ரொம்ப கவலைப்பட்டார். திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போய் ஏதாவது கஷ்டம் எனக்கு வருமோனு நினைச்சு, ‘யோசிச்சுக்கம்மா’னு சொன்னார். 

அப்பா எப்போதும் என் விஷயங்களில் தலையிடவே மாட்டார். அவரே, ‘யோசிச்சுக்கம்மா’னு சொன்னப்பிறகு எனக்கு போகணும்னு தோணலை. அதேபோல என் பாட்டியும் ரொம்ப பயந்துட்டாங்க. அவங்க இந்தநாள்வரை என்கூட உட்கார்ந்து  கஷ்டம் பற்றியெல்லாம் பேசினதா எனக்கு நினைவில்லை. அவங்களும் பயந்திருக்காங்க என்ற விஷயத்தை நான் ஃபீல் பண்ண முடிஞ்சது. அதனால்தான் நான் போகலை. ஆனால் நான் மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போகணும்னு நினைச்ச ரசிகர்கள்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றவர் தன்னை மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரிக்கிறார். 

“பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்தப்பிறகு உங்ககிட்ட எந்தெந்த பிரபலங்கள் போன் பண்ணி பேசினாங்க?” என்றதும் உற்சாகமாகிறார். “பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் போன் நம்பரை மாத்திட்டேன். அதனால் ஆரம்பத்தில் எனக்கு யாரும் போன் பண்ணமுடியவில்லை” என்றவர்  கொஞ்சம் யோசித்துவிட்டுத் தொடர்கிறார். “சிவகார்த்திகேயன் கூப்பிட்டுப் பேசினார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சி டெய்லி பார்ப்பேன். மிஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னவர், ‘ரொம்ப ஹேப்பியா இருக்கு’னு சொன்னார். இன்னைக்கு அவர் முக்கியமான நடிகர். இவ்வளவு உயரம் தொட்டு இருக்கார். ஆனாலும் அதே ப்ரியம், மரியாதைனு அன்னைக்கு ‘மெரினா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த அதே சிவாவாகவே இருப்பதுதான் அவரின் பலம். இந்த உயரத்துக்கு அவர் தகுதியான மனிதர். 

அடுத்து கீர்த்தி சுரேஷ் என்னை சென்னையிலுள்ள வீட்டில் வந்தே பார்த்தார். என்னைக் கட்டிப்பிடிச்சுகிட்டார். இதற்கு முன் நான் கீர்த்தியைப் பார்த்துப் பேசினதே இல்லை. அப்புறம் சிம்பு, சினிமா அனுபவத்தில் அவரைவிட நான் ஜூனியர். ஆனால் என்னை மனதாரப் பாராட்டியிருக்கார். இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள்... இப்படி என்னை சப்போர்ட் பண்ணின, பண்ணாத எல்லோருக்கும் என் பெரிய பெரிய நன்றிகள்.”

“பிக் பாஸிலிருந்து வெளியே வந்ததுக்குப் பிறகு ஜூலி பேசுனாங்களா?” என்றதும், “ஆமாம். ஒரு முறை போன் பண்ணாங்க. ரொம்ப வருத்தப்பட்டு அழுது பேசி, ஸாரி எல்லாம் சொன்னாங்க. ''பரவாயில்லை, ஸாரி எல்லாம்  சொல்ல வேண்டாம். எல்லாம் முடிஞ்சுருச்சு. இதையெல்லாம் மறந்துருங்க, லைஃப்ல போயிட்டே இருங்க''னு சொன்னேன். தப்பு பண்ணாதவங்கனு யாருமே கிடையாது. தவிர அங்க இருந்த சூழ்நிலை அப்படி. மன்னிக்க முடியாத அளவுக்கெல்லாம் அங்க யாரும் தப்புப் பண்ணலை. அவங்களை நாம எதுக்கு வெறுக்கணும். நான் அவங்களை மட்டும் சொல்லலை, ஜூலி, காயத்ரினு எந்த ஹவுஸ் மேட்டையும் நான் வெறுக்கலை” என்று அன்பு வார்த்தைகளால் அனைவரையும் அரவணைக்கிறார். 

இப்படி நிறைய கேள்விகள், அவரின் மனம் திறந்த பதில்கள் என அந்தப்பேட்டி நிறைவாக இருந்தது. தான் வெளியே வந்தவுடன் தன்னைக் கட்டிப்பிடித்து பேசிய பிரபல நடிகை, குஷ்பூவிடம் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவரின் நன்றிக்கடன்... என நிறைய தகவல்கள் அந்தப்பேட்டியில் இருந்தன. கடினமான கேள்விகளை அசால்ட்டாக கடந்தவர், ஓர் இயல்பான கேள்விக்கு உடைந்து அழுதே விட்டார். அது என்ன கேள்வி... இப்படி ஓவியாவின் முழுமையான பேட்டியை ஆனந்த விகடனின் சினிமா சிறப்பிதழ் வரும் வரை கொஞ்சம் வெயிட்டீஸ் ப்ளீஸ்.

- கே. ராஜசேகரன்

 


There are 2 Comments

Makkal Manathil

Add new comment

Or log in with...