பதுளை பிரதேசத்தில் பாரிய நீர்விநி​ேயாகத் திட்டம் ஆரம்பம் | தினகரன்

பதுளை பிரதேசத்தில் பாரிய நீர்விநி​ேயாகத் திட்டம் ஆரம்பம்

உலக நாடுகளால் இணக்கம் காணப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான '2030ஆம் ஆண்டில் சகலருக்கும் சுத்தமான குடிநீர்' என்ற இலக்கை அடைவதற்கான துரித செயற்பாடுகளை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்த இலக்கை 2020ஆம் ஆண்டில் அடையும் நோக்கில் அமைச்சு செயற்பட்டு வருகிறது.

கடந்த வாரம் பதுளை, ஹாலிஎலை மற்றும் அல்லை ஒருங்கிணைக்கப்பட்ட பாரிய நீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்ததோடு பசறை, ஹெப்டன் முதலான இடங்களில் சமூக அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார். மேலும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் பாராளுன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பதுளை, ஹாலிஎல, அல்ல ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம்:

பதுளை, ஹாலிஎல மற்றும் அல்ல முதலான பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 42 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் சுகாதார நிலையை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வழிபிறந்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய குடிநீருக்கான கேள்வியைiயும் கவனத்தில் கொண்டு பதுளை, ஹாலிஎல மற்றும் அல்ல போன்ற பிரதேசங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பான குடிநீரை வழங்க இக்கருத்திட்டம் வழிசெய்துள்ளது.

மகாவெலி கங்கையின் கிளை ஆறான பதுளு ஓயாவை குறுக்கறுத்து 17 மீற்றர் உயரமான நவீன முறையிலான மதிலொன்று கட்டப்பட்டுள்ளதன் மூலம் 132,000 கன லீற்றர் நீரை தேக்கி வைத்து நீர் மூலமாக பயன்படுத்துவதுடன் 15,000 கன லீற்றர் நீரை சுத்திகரிக்கக் கூடிய சுத்திகரிப்பு நிலையமொன்றையும் முழுப் பிரதேசத்திற்கும் பயனடையக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட 8 நீர்த் தாங்கிகளையும், பம்பி உள்ளிட்ட போதிய அழுத்தத்தை பிரயோகித்து நீரை விநியோகிக்கக் கூடிய குழாய்க் கட்டமைப்பையும் கொண்டதாக இந்த நீர் விநியோகத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நிதியுதவி உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தின் முதலீட்டையும் சேர்த்து ரூபா 11,880 மில்லியன் இக்கருத்திட்டத்திற்காக செலவாகியுள்ளது.

நீர் மூலத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளாந்தம் 15 ஆயிரம் கன மீற்றர் நீர் சுத்திகரிக்கப்படுவதுடன் அச்செயல்முறை மூலம் விடுவிக்கப்படும் கழிவு நீரை மேலும் சுத்திகரிக்க மீள்சுழச்சி கட்டமைப்பொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப முறையில் அமைந்துள்ள இந்த சத்திகரிப்பு நிலையம் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதனால் இதற்காக குறகிய நிலப்பரப்பொன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்படும் நீர் 08 உருக்கிலான தாங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டு நீர் விநியோகிக்கும் ''பொலிஎத்திலின்'' குழாய் கட்டமைப்பின் மூலம் 111 கிலோ மீற்றர் தூரத்திற்கு நீரை விநியோகிக்கக் கூடியதாகவுள்ளது.

பசறை சமூக நீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு திட்டம்:

இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 குடும்பங்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்பட இருப்பதோடு இதற்காக சுமார் 53 மில்லியன் ரூபா செலவாகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி மூலம் வழங்கப்பட்ட நிதியுதவியிலிருந்து 48.94 மில்லியன் ரூபா ஒதுக்கீடும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் பங்களிப்பாக ரூபா 4 மில்லியனும் பெறப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதேச செயலாளர் மூலம் இனங்காணப்பட்ட 86 குடும்பங்களுக்கு சுகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மலசலகூடம் அமைப்பதற்காக 35000 ரூபா வீதம் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உத்தேச பசறை நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாவது,

"பசறைப் பிரதேசம் மலைநாட்டில் அமைந்திருந்த போதிலும் சில காலங்களில் மக்கள் குடிநீருக்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இம்மாதிரியான சிறிய நீர் விநியோகத்திட்டங்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படுவதில்லை. மாறாக, இவற்றுக்கான முதலீடுகளை அரசாங்கம் மேற்கொள்வதோடு இக்கருத்திட்டங்களை அமைத்ததன் பின்னர் அவற்றை சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கு கையளித்து அவற்றை நிருவகிக்கும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைக்கின்றோம்.

சுத்தமான குடிநீரை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான கட்டண அறவீடுகளும் சமூக அடிப்படையிலான அமைப்புகளினாலேயே அறவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கருத்திட்டங்களில் ஏற்படும் சீர்குலைவுகளை திருத்தியமைக்கும் வேலையையும் அந்த அமைப்புகளே பொறுப்பேற்க வேண்டும்.

இது போன்ற 352 சமூக நீர் வழங்கல் குடிநீர்த் திட்டங்கள் நாடுமுழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டங்களுக்கு மேலதிகமாக மக்களின் சுகநலப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வசதியற்ற 80 குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றோம். இன்னும் உமாஓயா திட்டத்தினால் கூடுதலான பாதிப்புக்குள்ளான பண்டாரவளை பகுதிக்கும் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துவருவதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இப்பிரதேசத்தின் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் பொருளாதார வசதியற்ற குடும்பங்களை இனங்கண்டு மலசலகூடம் அமைப்பதற்காக குடும்பம் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்து அவற்றை மூன்று படிமுறைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அது மட்டுமல்லாது வசதிகுறைந்த பாடசாலைகளுக்கு மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமொன்றையும் எமது அமைச்சு அமுல் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதோடு மாணவிகளுக்கு தனியான மலசலகூட வசதிகளை அமைப்பதையும் வலியுறுத்தி வருகின்றோம்.

உலக வங்கியின் உதவியுடன் பின்தங்கிய தோட்டப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சுகநல பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் உலக வங்கியின் பாராட்டைப் பெற்றுள்ளதோடு அம்மாதிரியான திட்டங்களுக்கு மேலும் உதவுவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் உதவியுடன் இலங்கையின் ஏழு மாவட்டங்களில் இம்மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

லயன்களில் அவலத்துடன் வாழும் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி விளையாட்டு மைதானங்களை அமைத்துக் கொடுப்பதில் தற்போதைய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.

தமிழ் பேசும் மாணவர்கள் படிக்கின்ற பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யவதற்காக நடவடிக்கை எடுக்கும்படி கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த போது நாம் வேண்டுகோள் விடுத்தோம்".

ஹோப்டன் நீர் வழங்கல் திட்டம்:

அதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹொப்டன் - ரேந்தல்பொல நீர் வழங்கல் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இச் சமூக நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுமார் 455 குடும்பங்கள் பயனடைய இருப்பதுடன் வேல்ட் விஷன் வழங்கும் ரூபா 6.7 மில்லியன் உள்ளடங்களாக சுமார் ரூபா 80 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 131 குடும்பங்களுக்கு சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுக்கான உதவி வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம் எதிர்வரும் 2018 ஜுன் மதமளவில் உத்தேச நீர் வழங்கல் திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

லுணகல சமூக நீர் வழங்கல் திட்டமும் நகர அபிவிருத்தி நடவடிக்கைகள்:

பதுளை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான லுணுகல மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அண்மையில் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவு புதிதாக அமைக்கப்பட்டது. லுணுகல நகரை சூழ வாழும் 700 குடும்பங்கள் பயனடையும் வகையில் புதிய நீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் லுணுகல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அன்றைய தினம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சு​ரேஷ் மற்றும் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நீர் வழங்கல் திட்டத்திற்கு மேலதிகமாக லுணுகல நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. பாதை மறுசீரமைத்தல். வாகனத் தரிப்பிடமொன்றை அமைத்தல் மற்றும் சுகநல பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் வகையில் மலசல கூடங்களை அமைப்பதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிதியுதவியை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

ஏ.ஹில்மி முஹம்மத்
ஊடகப் பணிப்பாளர்
நகர திட்டமிடல் மற்றும்
நீர் வழங்கல் அமைச்சு


Add new comment

Or log in with...