பெயர்ப்பலகையோ, மொழியோ அவசியமில்லை: வீடுகளே முக்கியம் | தினகரன்

பெயர்ப்பலகையோ, மொழியோ அவசியமில்லை: வீடுகளே முக்கியம்

பெயர்ப்பலகையோ அதிலுள்ள மொழியோ முக்கியமல்ல, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதே முக்கியமென இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உதவிகளை பெற்று தமது மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக தெரிவித்த அமைச்சர், அரபு மொழியிலோ வேறு மொழியிலோ பெயர்ப்பலகை இருப்பதை விட வீடு கட்டப்படுவதே முக்கியம் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வடக்கில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பாக வினவப்பட்டது.

அந்த வீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி பெறப்படுகிறதா? பெயர்பலகைகளில் ஏன் தமிழ் ,சிங்கள மொழிகளில் எழுதப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர்,

அரசாங்க செலவில் கட்டப்படும் வீடுகளுக்கு அமைச்சரவை அனுமதி பெற ​வேண்டும். ஆனால் வேறு உதவிகளுடன் கட்டப்படும் வீடுகளுக்கு அவ்வாறு அனுமதி தேவையில்லை. காணிக்குத் தான் அனுமதி பெறவேண்டும்.

மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்குச் சென்று உதவிகள் பெற்று அமைச்சர் ரிசாத் வீடு கட்டிக் கொடுப்பது எனக்குத் தெரியும் என்றார்.

அண்மையில் வீட்டுத் திட்டமொன்றுக்கு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. அதில் ஆங்கில மொழியும் வேறு மொழியுமே காணப்பட்டன. அரச கரும மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது .இது தவறில்லையா? என ஊடகவியலாளர் வினவியதற்குப் பதிலளித்த அமைச்சர், பெயர்பலகையன்றி, வீடு கட்டிக் கொடுப்பது தான் முக்கியம். அது எந்த மொழியில் இருந்தால் என்ன? என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க,

நான் ஊடக அமைச்சராக இருந்த போது ஊடகவியலாளர்களுக்கு வீடு கட்டதிட்ட மிட்டேன் . இதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணியை ஒதுக்கினாலும் மஹிந்த ஆட்சியில் அதனை வேறு தேவைக்கு பெற்றிருந்தமை பின்னர் தான் தெரியவந்தது.

காணி அமைச்சர் என்ற வகையில் ஹோமாகம பகுதியில் ​வேறு ஒரு காணியை பெற நடவடிக்கை எடுத்துள்ளேன். நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற செயற்பட்டு வருகிறேன். இதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்க ​வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 

 

 


Add new comment

Or log in with...