தீபாவளி முற்பணமாக ரூ. 10,000 வழங்க கோரிக்கை | தினகரன்

தீபாவளி முற்பணமாக ரூ. 10,000 வழங்க கோரிக்கை

 

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை கருத்தில் கொண்டும் தீபாவளி பண்டிகை முற்பணத்தை இம்முறை 10,000 ரூபாவாக அதிகரித்து உடன் வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் தலைவர் முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தமது விசேட தினங்களை கொண்டாடுவதில் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கின்றனர். அதிலும் தீபாவளிப் பண்டிகையை மலையக மக்கள் வெகு சிப்பாக கொண்டாடுவதுண்டு. தொழிலாளர்கள் பணவசதிகளின்றி, பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள இவ்வேளையில் வாழ்க்கை செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இதனால் வழமையாக வழங்கும் தொகை போதாதுள்ளது.

எனவே, தோட்டக் கம்பனிகள் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். எனவே நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10,000 ரூபாவை தீபாவளி பண்டிகை முற்பணமாக வழங்க இலங்கை முதலாளிமார் சம்மேளனம் முன்வர வேண்டும். மேலும் மிக விரைவாக முற்பணத்தை வழங்க வேண்டுமெனவும், தலைவர் முத்து சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். 


Add new comment

Or log in with...