அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது | தினகரன்

அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது

அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அமைச்சர்கள் மாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மின்சார வாரியம், டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இதுபோன்ற முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளன. முறையான விசாரணை நடந்தால் அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை அதற்கான வாய்ப்பில்லை.

அண்ணாமலை பல்கலை.யில் ஊதியம் வழங்கவில்லை என்று தொடர்ந்து போராட்டம் நடந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அண்ணாமலை பல்கலை.யில் செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதேபோல, இப்போதும் பல பிரச்சினைகளில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. டெங்கு பிரச்னையில் மாநில அரசின் அலட்சியம் குறித்து இன்றைக்கு பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. எனவே, முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான் உண்மைகள் வெளி வரும்.

அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது. அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்தியதற்காக திமுகவின் சார்பில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 


Add new comment

Or log in with...