தமிழக அரசியல்: மோடி - ஆளுநர் சந்திப்பு | தினகரன்

தமிழக அரசியல்: மோடி - ஆளுநர் சந்திப்பு

 

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின் ஆட்சி, கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. முதல்வருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் திமுக சார்பில், சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, இரு வழக்குகளும் வரும் நவ.2-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் கடந்த மாத இறுதியில் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 6-ம் திகதி பதவியேற்ற அவர், 8-ம் திகதி மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை சந்தித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்து பேசினார். ஆளுநராக பதவியேற்றவர் சம்பிரதாய அடிப்படையில், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல், இந்த சந்திப்புக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், பெரும்பான்மை வாக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டியுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தின் அரசியல் ரீதியான சிக்கல்கள் மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரதமரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

 


Add new comment

Or log in with...