சைற்றம் எதிர்ப்பு இயக்கம் ஊடாக அரசை களங்கப்படுத்தும் திட்டம்! | தினகரன்

சைற்றம் எதிர்ப்பு இயக்கம் ஊடாக அரசை களங்கப்படுத்தும் திட்டம்!

 

ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பன வழமையானதே. தமது தேவை, கோரிக்கை, எதிர்பார்ப்பு என்பன நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்கங்களாலும், மாணவர் அமைப்புகளாலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்நடவடிக்கைகளுக்கு பொறுப்பு மிக்க அரசாங்கங்கள் நியாயபூர்வமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றன.

அந்தவகையில் ஜனநாயக விழுமியத்தைப் பின்பற்றும் இலங்கையிலும் இவ்வாறான நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது. இதற்கு ஒன்று கூடுவதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பன பக்கபலமாக அமைந்துள்ளன. இவற்றின் துணையோடு முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் மூலம் நிவாரணங்களையும், தீர்வுகளையும் பெரும்பாலும் பெற்றுக் கொள்ள முடிவதையும் அவதானிக்க முடிகின்றது. தற்போதைய அரசாங்கம் பல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும், ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அத்தோடு அவ்விவகாரங்களும் முற்றுப் பெற்று விட்டன.

என்றாலும் சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களும், தொழிற்சங்க நடவடிக்கைகளும், ஊர்வலங்களும் முடிவின்றி தொடர்ந்த வண்ணமுள்ளன. இது தொடர்பில் மாணவ அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் சைற்றம் விவகாரம் தொடர்பில் தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புக்களும் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் நியாயபூர்வமான தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இருந்தும் நேற்றுமுன்தினமும் கூட ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. சைற்றம் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முற்றுப்பெற்றதாக இல்லை. அவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.அதனால் சைற்றம் விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் சந்தேகங்கள் தோன்றியுள்ளன. சைற்றம் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்வுகள் தொடர்பில் அக்கறை செலுத்தாத தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சுயலாபம் தேடும் பின்புலம் இருப்பதாகவே தெரிகின்றது. குறிப்பாக அற்ப இலாபம் தேடும் அரசியல் பிண்ணனி இருப்பதாகவே தெரிகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது சைற்றம் விவகாரத்தின் போர்வையில் அரசாங்க வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் வேலைநிறுத்தங்களை மேற்கொள்கின்றனர். தலைநகரில் அடிக்கடி ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றனர். இவற்றின் விளைவாக வீதிகள் எங்கும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள்தான் பெரும் அசௌகரியங்களுக்கு மு-கம் கொடுக்கின்றனர். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கோபம் கொள்ள இது நல்ல துருப்புச்சீட்டாக அமைவதோடு அதனை ஒரு யுக்தியாகப் பயன்படுத்துவதாகவே தெரிகின்றது.

அதேநேரம், சைற்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபடுபவர்கள் வேண்டுமென்றே தம் வரையறைகளை மீறிச் செயற்படுகின்றனர். குறிப்பாக சட்ட வரையறைகளை மதித்து நடக்கத் தவறுகின்றனர். அதன் விளைவாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு பொலிஸார் உள்ளாகின்றனர்.

இவ்வாறான சூழலில் பொலிஸார் மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் பிழையான வகையில் சித்தரித்துக் காட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அதாவது, தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை கொடுங்கரம் கொண்டு நசுக்கி வருகின்றது எனச் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். இதன் ஊடாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் பெற்றுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நற்பெயரைப் பெற்றுக் கொள்வதற்கு இந்நாட்டின் ஜனநாயக விழுமியங்களை மீள உயிர்ப்பித்தமையே அடிப்படையாக அமைந்தது. அதனைச் சிதைத்து விடுவதற்காகவே தற்போதைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் எண்ணத்தோன்றுகின்றது.

ஏனெனில் கடந்த ஆட்சியாளர்கள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் என்ன காரணங்களுக்காகவெறுப்பைப் பெற்றார்களோ அவ்வாறான ஒரு நிலையை இப்போதும் ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவே தெரிகிறது. ஆனால், உண்மைக்குப் புறம்பான தோற்றப்பாட்டை நாட்டுக்கும் தேசத்திற்கும் வழங்கி வருவதால் நாடும், நாட்டு மக்களுமே அபகீர்த்திக்கு உள்ளாவர். இதனை இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சைற்றம் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே அரசாங்கம் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கையில் இதர விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுக்காது என்றில்லை.

ஆகவே சைற்றம் விவகாரம் தொடர்பில் எஞ்சியுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடும் போது நியாயபூர்வமான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமே இல்லை. இதனை உணர்ந்து செயற்பட வேண்டியது தொழிற்சங்கங்களினதும், மாணவர் அமைப்புக்களினதும் பொறுப்பாகும். இதனை விடுத்து ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி, நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்படுவதாக சித்தரிக்க முயற்சிப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் மாத்திரமல்லாமல் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துபவர்களையும் கூட பாதிக்கவே செய்யும் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.


Add new comment

Or log in with...