நீதி விசாரணைக் காலம் இழுத்தடிப்பு; அரசியல் கைதிகள் மரணிக்க அரசாங்கம் விரும்புகின்றதா? | தினகரன்

நீதி விசாரணைக் காலம் இழுத்தடிப்பு; அரசியல் கைதிகள் மரணிக்க அரசாங்கம் விரும்புகின்றதா?

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை மதித்து அவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 17 வெகுஜன அமைப்புகள் சார்பில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு நேற்று(10) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த 17 அமைப்புகளின் சார்பில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் முக்கியஸ்தர் அருட் தந்தை சக்திவேல் நேற்று(10) இவ்வேண்டுகோளை அரசாங்கத்திற்கு முன்வைத்தார். கொழும்பில் நேற்று(10) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். சட்டத்தரணி சேனக்க பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் 16 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வவுனியா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள தமக்கான வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தே போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது கோரிக்கை மிக நியாயமானதாகும். இவர்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தமது வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கூடாது என்றே போராடுகின்றனர்.

இவர்கள் மூவரும் கடந்த ஆகஸ்ட் (20) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அச்சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எமது அமைப்பு எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனிடம் கடிதமொன்றை கையளித்தது. அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி மேற்படி கைதிகளுக்கு நீதி கிடைக்குமாறு செய்யவேண்டுமென அவரிடம் கோரியிருந்தோம். அச் சமயம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் எதிர்க் கட்சித் தலைவர் மீது நம்பிக்கை வைத்து ஆகஸ்ட் (25) தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும் ஒரு மாதம் கடந்த நிலையிலும் செப்டம்பர் மாதம் (25) சிறைச்சாலை அதிகாரிகள் இந்த மூவரையும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் முதல் அவர்கள் மூவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், யுத்தம் முடிவடைந்த பின்னர் இவர்கள் ஒரு வருடம் புனர்வாழ்வளிக்கப்பட்டுமுள்ளனர். அதன் பின் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மேலும் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனையடுத்து மூன்று மாதத்தின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களமானது அவர்களின் வழக்கு ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறி அந்த கோவைகளை மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. இரண்டு வாரங்கள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறியபோதும் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்டமா அதிபர் திணைக்களம் இரண்டு வாரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று கூறியது. அதன் பிறகு ஒன்றரை வருடத்திற்கு பின்பே சம்பந்தப்பட்ட அந்த கோவை நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வருட காலம் கழிந்த நிலையிலும் இவர்களது வழக்கை அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய காரணமென்னவென்று கேள்வியெழுப்பப்படும் நிலையில் சாட்சிகளின் பாதுகாப்பு கருதியே இவ்வாறு மாற்றப்படுவதாக கூறுகின்றனர்.

இலங்கையில் இராணுவம், பொலிஸார் என பாதுகாப்பு பலமான உள்ள நிலையில் ஏன் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது? என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எமது அமைப்பானது கேட்கிறது.

இந்த வழக்கு அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் போது, அங்கு சம்பந்தப்பட்ட கைதிகள் சார்பில் பேசுவதற்கு சட்டத்தரணிகள் இருக்கமாட்டார்கள். வேறு சட்டத்தரணிகளை அதற்காக நியமிக்கும் போது அதற்கு பெருமளவு பணம் செலவிட நேரும். ஆனால் அக் கைதிகளின் பெற்றோர்களோ மிக வறியவர்கள்.

இவர்களை அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான காரணம் எதுவும் கிடையாது. இந்த சூழ்நிலையில்தான் எங்கே தமக்கான வழக்கு தொடரப்பட்டதோ, அங்கேயே தொடர்ந்து அந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதே அவர்கள் மூவரினதும் கோரிக்கையாகும்.

இந்த நியாயமான கோரிக்கையை அனைத்து அரசியல் கைதிகளும் ஏற்றுக்கொள்வதுடன்,அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு நாம் கடந்த (29) மீண்டும் அவசர கடிதமொன்றை எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கையளித்துள்ளோம்.

அதற்கு அவரிடமிருந்து இதுவரை எந்தவித பதில்களும் கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த (05) ஜனாதிபதிக்கு ஒரு அவசர கடிதத்தை தயாரித்து, அவரது செயலாளரிடம் கையளித்தோம். சட்டமா அதிபருக்கும் நீதி அமைச்சுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம். அதுமட்டுமன்றி கடந்த (17) யாழ்ப்பாணத்தில் 17 அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவசர தொலைநகல் ஒன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

இந்த விடத்தில் நீதியைப் பெற்றுத்தருமாறு கோரியே நாம் இந்த செயற்பாட்டை மேற்கொண்டோம்.

அரசாங்கம் எமது கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எதிர்க் கட்சித் தலைவரோ இதுவரை உரிய பதிலெதுவும் வழங்கவில்லை. காலம் இழுத்தடிக்கப்படுகின்றமை கைதிகளுக்கான நீதி காலங்கடத்தப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

காலம் இழுத்தடிக்கப்படுகின்றதென்றால் இவர்களது மரணத்தை அரசாங்கம் விரும்புகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றோம். நல்லாட்சி, இனங்களுக்கிடையிலான நல்லுறவு எனக்கூறும் அரசாங்கம் இவ்வாறு மௌனம் காப்பது முறையா?

இதனால் வடக்கு மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...