Friday, March 29, 2024
Home » காசா தாக்குதல் மேலும் உக்கிரம்; ஒரே நாளில் 700 இற்கும் அதிமானோர் பலி

காசா தாக்குதல் மேலும் உக்கிரம்; ஒரே நாளில் 700 இற்கும் அதிமானோர் பலி

- மேலும் இரு பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

by sachintha
October 25, 2023 6:42 am 0 comment

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5000ஐ தாண்டி அதிகரித்து வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் முழு முற்றுகை மருத்துவமனைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள குழந்தைகள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் மரணிக்கும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அங்கு உடன் போர் நிறுத்தத்திற்கு உதவி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

காசாவில் உள்ள 24 மருத்துவமனைகளில் எட்டு மருத்துவமனைகள் செயலிழந்துவிட்டதாக மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் முஹமது சக்கூத் தெரிவித்தள்ளார்.

இதில் காசாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 400க்கும் அதிகமான இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த உக்கிர தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 5,791 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 16,297 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் குறைந்தது 2 மணி நேரமாகத் தொடர்ந்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காசாவின் மக்கள் திரள் கொண்ட பரபரப்பான சந்தை தகர்க்கப்பட்டுள்ளது.

உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான நெருக்கடி நிலவும் நிலையில், எஞ்சியிருக்கும் பொருட்களுக்காக மக்கள் திரளாகச் சேரும் சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே பத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளிடையே இன்னும் பலர் சிக்கியுள்ளனர்.

காசாவின் தெற்கு பகுதி கான் யூனிஸில், அல்-நாசர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள நுசைரத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. போர் ஆரம்பித்தது முதல் இதே இடத்தில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை. இறந்தவர்களின் உடல்களை வைக்க போதிய இடமில்லாது மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்துள்ளார்கள்.

காசாவின் தெற்கு பகுதி தாக்கப்படும் அதே நேரத்தில், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் தொடரவுள்ளதாகவும் அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயருமாறும் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது.

எனினும் ஏற்கனவே தெற்கை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் அங்கும் தாக்கதல்கள் இடம்பெறுவது மற்றும் தங்குமிட வசதிகள் இல்லாததன் காரணமாக மீண்டும் வடக்கிற்கே திரும்பியுள்ளனர்.

இந்தப் போரில் பயன்படுத்தும் ஆயுதங்களின் வீரியம் மக்களை அதீதமாக பாதித்துள்ளது. தோல் மெழுகு போல் உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இஸ்ரேல் மீது உலக அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

காஸா மட்டுமல்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தப் போர் ஆரம்பித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது 1,828 பேர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களால் காசாவின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் காசாவுக்கான இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே எல்லைக்கடவையான ராபா எல்லை வழியாக கடந்த 54 உதவி லொறிகள் சென்றுள்ளன.

இது கடலில் போட்டதற்கு சமமாகும் என்று ஐக்கிய நாடுகளின் பலஸ்தீன அகதிகள் நிவாரண நிறுவனத்தின் தொடர்பாடல் தலைவர் தமரா அல்ரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதவிகளில் இடம்பெறாத மின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் அவசர தேவையாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார். அரிசி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் கிடைத்தாலும் அதனை சமைப்பதற்கு தேவையான நீர் மற்றும் எரிவாயு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் காசா மீதான தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் விரைவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சாத்தியங்கள் குறைந்துள்ளன.

காசா மீதான தாக்குதல்களை நிறுத்தும் திட்டம் இல்லை என்று இஸ்ரேலிய இராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹெல்வி தெரிவித்தார். “நாம் ஹமாஸை முழுமையாக அகற்றும் நிலைக்கு கொண்டுவர விரும்புகிறோம். தெற்கில் தரைவழி நடவடிக்கைக்கு நாம் நன்றாக தயாராகி உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை மேலும் இரு பணயக்கைதிகளை விடுவித்தது.

வயதான இரு இஸ்ரேலிய பெண்களையே அது விடுவித்தது. முன்னதாக இரு அமெரிக்கர்களை விடுத்திருந்தது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி 1400க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் 200க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் மோட்டார் சைக்கிள்களில் தான் கடத்திச் செல்லப்பட்டதை விவரிக்கும் போது, ​​தான் நரகத்தில் இருந்ததாக விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தன்னை காசாவுக்குள் கொண்டு சென்றதாகவும் சவாரி செய்ததால், காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். இஸ்ரேலிய அரசாங்கம் எல்லை வேலிக்காக கோடிக்கணக்கில் செலவழித்தாலும், அது ஹமாஸ் நுழைவதைத் தடுக்க எதுவும் செய்ய முடிவில்லை என்று அவர் கூறினார்.

எனினும் அவர்கள் தம்மை நன்றாக கவனித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பட்சத்திலேயே காசாவில் போர் நிறுத்தம் ஒன்று பற்றி பேச்சுவார்த்த நடத்த முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அங்கு விஜயம் மேற்கொள்ளும் மேற்குலக தலைவர்களின் வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனும் நேற்று முன்தினம் (23) இஸ்ரேல் சென்றார். இதன்போது அவர் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவு வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அங்கு சென்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை சந்தித்திருந்தனர்.

இந்த மோதல் பிராந்தியத்திற்கு பரவும் ஆபாயம் குறித்து மத்திய கிழக்கு தலைவர்கள் அஞ்சி வருகின்றனர். ஏற்கனவே மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் லெபனான் எல்லையில் மோதல் பரவியுள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும்படி ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்டார் ஆட்சியாளர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். “இது போதும் என்று நாம் கூற விரும்புகிறோம். கொலைகள் புரிவதற்கு இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற பச்சைகொடி மற்றும் கட்டுப்பாடற்ற அங்கீகாரம் வழங்கப்படக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT