பெண்களுக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் கௌரவிப்பு | தினகரன்

பெண்களுக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் கௌரவிப்பு

தேசிய மட்டத்தில் எந்த விதமான வளங்களும் இல்லாமல் சாதனைகளை நிலை நாட்டும் நாங்கள் இனிவரும் காலங்களில் சர்வதேச மட்டத்திலும் சாதனைகளைப் படைக்க முன்வர வேண்டும். எமது பாரம்பரிய விளையாட்டுகளின் பெருமை பற்றி தேசிய ரீதியாகவும் மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சிலாகித்துப் பேசப்படுமளவுக்கு எமது விளையாட்டு வீரர்களை நாங்கள் உருவாக்க வேண்டும் என்று கணேஷ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று தேசிய சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தை சுவீகரித்து கொண்டது. இதன் மூலம் வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ள அணி வீரங்கனைகளை வரவேற்கும் வகையில் நெல்லியடி பாடசாலை மற்றும் மக்களினால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் சி.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கணேஷ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

நான் பிறந்து வளர்ந்த மண்ணிலுள்ள மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளார்கள் என்பது எமது மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. தமிழினம் எதற்கும் சளைத்ததல்ல. தமிழ் மாணவிகளின் இத்தகைய தொடர் வெற்றிகள் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. அவர்களை நாம் மேலும் வலுவூட்டி அகில இலங்கை மட்டம் மாத்திரம் அல்லாது சர்வதேச ரீதியாகவும் போட்டிகளில் பங்குபற்றி அவர்கள் சாதனைகளை நிலைநாட்ட வழிவகுக்க வேண்டும்.. மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தி பயிற்சி அளித்த ஆசிரியர்களிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெருமையுடைகின்றேன்.

இந்த மாணவ வீராங்களை போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக எந்தவிதமான வளங்களுமின்றி கஷ்டத்தை எதிர் நோக்கி வந்தனர். இந்த அவல நிலையை அறிந்து போட்டிகளிற்கு என போசாக்கு உணவு இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவீன்ங்களுக்காக ரூபா 100,000 தொகையினை பாடசாலை அதிபர் திரு.சி.கிருஸ்ணகுமார் அவர்களிடம் வழங்கி வைத்துள்ளேன். இவை தவிர விளையாட்டுத் துறை ரீதியாக யாழ். மண்ணைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்த பயிற்றுவிக்கின்ற அசிரியர்களும் எம்மாலான உதவிகளைச் செய்து வருகின்றோம்.

இத்துடன் இந்த விளையாட்டுடன் நின்றுவிடாது மாணவர்கள் தொடர் வெற்றிகளை பெறவேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். இந்தியாவில் கபடி விளையாட்டுத் துறைக்கு பெரிய வரவேற்பு இருக்கின்றது எனவே இவர்களிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உதவிகளையும் சிவன் அறக்கட்டளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும் மாணவர்களின் ஊட்ட சக்திக்கான போசாக்கு உணவுகளையும் ஏனைய உதவிகளையும் வழங்கி விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக வலுசேர்த்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(மாவத்தகம நிருபர்) 


Add new comment

Or log in with...