மாணவரின் கற்றல் இடர்பாடுகளை களைவது ஆசிரியர்களின் பொறுப்பு | தினகரன்

மாணவரின் கற்றல் இடர்பாடுகளை களைவது ஆசிரியர்களின் பொறுப்பு

பொதுவாக பிள்ளைகள் அனைவரும் ஒரே சீரான முறையில் கற்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். சிலர் விரைவாகக் கற்பார்கள். சிலர் மந்தமாகக் கற்கின்றனர். இதற்கான காரணிகள் பலவுள்ளன.

அந்தக் காரணிகளில் முக்கியமானவைகளாக உடலியற் காரணிகள்,சமூகக் காரணிகள்,பொருளாதாரக் காரணிகள் என்பன உள்ளன. இவற்றில் எக்காரணிகளாக இருப்பினும் அதனை இனங்கண்டு நிவர்த்தி செய்வதற்கான முறைகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு ஆசிரியரைச் சார்ந்தாகும். இதனைநிவர்த்திக்கின்ற போதுதான் அந்த மாணவனும் சிறந்த கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து ஆகும்.

பெற்றோர் தம் பிள்ளைகளை குறித்த வயதில் பாடசாலைக் கற்றலுக்காக பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ஆசிரியர் மாணவர்களை இனங்கண்டு,அவர்கள் மீதான கற்றலை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாணவன் மீதும் தனிப்பட்ட முறையிலான கவனத்தை செலுத்தி கற்றலை மேற்கொள்வதும் கட்டாயமாகும். இவ்வேளையில் சில மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளிலிருந்து வெளிக்காண்பிக்கும் நடத்தையானது வித்தியாசமான முறைகளில் அமையுமானால் அவர்கள் கற்பதிலிருந்து விலகியிருப்பார்கள். இதனை அறிந்து கொண்டு அவர்களின் நிலைமைக்கேற்ப கற்றலின்பால் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால்தான் ஆசிரியர் வகுப்பறையில் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு மாணவர்களை வழிப்படுத்துகின்ற போது, அங்கே ஆசிரியர் ஒரு வைத்தியராக,ஆலோசகராக, தந்தையாக, தாயாக, சகோதரராக காணப்படுகின்றார். அப்போதுதான் மாணவரின் நிலையை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்கின்ற போது, பல்வேறு காரணிகளும், பலதரப்பட்ட கற்றல் முறைகளும் கையாளப்படுகின்றன. அவ்வாறு மேற்கொண்டாலும் சில காரணிகளின் அடிப்படையில் மாணவர்கள் கற்றலில் இடர்பாட்டினைக் காண்பிக்கின்றார்கள். அதற்கான பரிகாரங்களைக் கண்டறிந்து அதற்கேற்ற கற்றல் முறைகளைக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும். பொதுவாக கற்றல் இடர்பாடுகள் என்பது கற்றலின் போது எய்தப்பட வேண்டிய தேர்ச்சியை எய்த அல்லது அடைய முடியாமல் தத்தளிக்கின்ற நிலைமையாகும்.

இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது பாடரீதியாக கற்றல் இடர்பாட்டினை மாணவர்கள் எதிர்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

மொழிரீதியாக கற்றல் இடர்பாட்டினை வரையறை செய்கின்ற போது பின்வரும் விடயங்களில் மாணவர்கள் கற்றலில் இடர்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதாவது,செவிமடுப்பவற்றை விளங்கிக் கொள்ள முடியாமை,செவிமடுப்பவற்றை கிரகித்து துலங்க முடியாமை,தெளிவாக உச்சரித்துப் பேச முடியாமை, கருத்துக்களை வெளிப்படுத்திப் பேச முடியாமை, வினாக்களுக்கு விடை கூற முடியாமை, எழுத்துக்களை இனங்கண்டு உச்சரிக்க முடியாமை, நிறுத்தற் குறியீடுகளை அனுசரிக்க முடியாமை, எழுத்துக்கூட்டி வாசிக்க முடியாமை, தெளிவாக உச்சரித்து உரத்து வாசிக்க முடியாமை,விளக்கமான முறையில் விளங்கி வாசிக்க முடியாமை,வாசித்தவற்றைக் கிரகிக்க முடியாமை, எழுத்துப் பொறிமுறைகளை அனுசரித்து எழுத முடியாமை, பார்த்தெழுத முடியாமை,கேட்டெழுத முடியாமை, வாக்கியங்களை ஆக்கி எழுத முடியாமை, பாடங்களுக்கு விளக்கம் எழுத முடியாமை போன்றன மொழியின் அடிப்படையில் கற்றல் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

அதேபோன்று கணித பாடத்திலும் இவ்விடர்பாடுகள் நிறையவே காணப்படுவதாக கண்டறிப்பட்டுள்ளன. அந்த வகையில் அவற்றினையும் பார்ப்போம்.

எண்களின் பெறுமானத்தைஅறியாமை,எண்களின் பெயர்களை அறியாமை, எண்குறியீடுகளை அறியாமை,எண்களை வரிசைப்படுத்த முடியாமை (ஏறுவரிசை,இறங்குவரிசை),எண்களில் இடப்பெறுமானத்தை அறியாமை, கொண்டு செல்லலுடன் கூட்ட முடியாமை, கொண்டு வருதலுடன் கழிக்க முடியாமை, நீளம், உயரம் என்பவற்றைஅளக்க முடியாமை அளவுகளை ஒப்பிட முடியாமை, திசைகள் பற்றிய தெளிவான அறிவின்மை,பணக்கொடுக்கல், வாங்கல்களை கணக்கிட முடியாமை, வடிவங்களின் பெயர்களைக் குறிப்பிட முடியாமை, வாய்ப்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாமை. போன்ற பல்வேறு தேர்ச்சிகளில் மாணவர்கள் இடர்படுகின்றனர். பொதுவாக ஆரம்பக்கல்விச் செயற்பாட்டிலேயே இதனைக் காண முடியும்.

இதற்கான சரியான தீர்வினைக் காண முற்படாத பட்சத்தில் அந்தப் பிள்ளை மேல்வகுப்புக்களில் முழுமையான கற்றல் இடர்பாட்டிற்குள் ஆளாகி பாடசாலைக் கல்வி மீது வெறுப்பு ஏற்பட்டு இறுதியில் கற்றலமுழுமையாகக் கைவிடும் நிலைக்கு மாறி விடுவான்.

எனவேதான் மாணவர்களின் இடர்பாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து கொள்வதுடன்,அதனை அறிவதற்கான அணுகுமுறைகளையும் ஆசிரியர் இனங்கண்டு அதன் ஊடாக அந்த மாணவனை தேர்ச்சியடைய வைப்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் மாணவர்களிடமிருந்து குறைகாண் பரீட்சையை நடாத்தி அவதானித்தல், மாணவர்களின் நடத்தைக் கோலங்களை உன்னிப்பாக அவதானித்தல் ,மாணவர்களுடன் சிநேகமுறையில் உறவாடி அவர்களது துலங்கலைஅறிந்து கொள்ளல்,மாணவர் செயற்பாடுஒன்றில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவனுக்குத் தெரியாமல் விசேடமாக அவதானித்தல், மாணவர்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள அறிக்கைகள், குறிப்பேடுகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தல்.

மாணவர்களது பயிற்சிக் கொப்பிகள்,புத்தகங்கள் போன்றவற்றைப் பார்வையிட்டு அறிந்து கொள்ளல்,மாணவனின் நெருங்கிய நண்பர்களை அறிந்து அவர்களின் நடத்தைகள் பற்றி அறிந்து கொள்ளல்,தேவைப்படின் மாணவர்களின் வீட்டுக்குச் சென்று தகவல்களைப் பெற்றுக் கொள்ளல்,மாணவர்களின் சித்திரங்கள்,ஆக்கங்கள் என்பவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ளல்,ஆசிரியர் மேற்கொண்ட கற்றல் கற்பித்தல்,அணுகுமுறைகள் பொருத்தப்பாடு பற்றி ஆராய்தல்,ஆசிரியர் மாணவர்களிடம் கொண்டுள்ள மனப்பாங்கு,மாணவர் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிஅறிந்து கொள்ளல்,அவசியமாயின் வைத்தியர் ஒருவரிடம் காணப்பித்து அவரது கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளல்.

அதேபோன்று உளவளத்துணையாளர்களிடம் காண்பித்துஅவரது கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளல் உசிதமாகும். இவ்வாறு பல்வேறு அணுகுமுறைகளைக் கைக்கொள்ள வேண்டியஅவசியம் இன்றுஆரம்பக் கல்விவகுப்பறைகளைப் பொறுத்தளவில் காணப்படுகின்றது. இதனை அறிந்து கொள்ளவும் முடியாமல்,வெளியே கேட்கவும் முடியாமல் எந்தவொரு பிரச்சினைக்கும் மாணவர்களையே குறை கூறி அவனை கற்றலிருந்து துரத்துகின்றசந்தரப்பங்கள் சில பின்தங்கிய பிரதேசத்துப் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. இதனை நிவர்த்திக்க வேண்டியது அவசியம்.

சி.அருள்நேசன்
(கல்வி,பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...