கூண்டுக்குள் அடைத்தாலும் கொட்டம் அடங்கவில்லை! | தினகரன்

கூண்டுக்குள் அடைத்தாலும் கொட்டம் அடங்கவில்லை!

ந்து நாள் அவசரப் பரோலில், சிறை வாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள்.சசிகலாவின் பரோல் இன்றுடன் முடிவடைகிறது.

“பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்புக் கொடுத்தனர். வழியில் தேனீர்க் கடையில் நிறுத்திய போதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்துள்ளனர். சசிகலா கார்ப் பயணம் முழுக்கவே ஆதரவாளர்கள் ஆதரவைத் தெரிவிக்க, "போன முறை இதே வீதி வழியாகத்தான் கைதாகி சிறைக்குச் சென்றேன்.

அப்போது என்னைப் பல இடங்களில் கடுமையாகத் திட்டினார்கள். ஆனால், தற்போது இந்தளவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்னை உருகச் செய்கிறது" என தினகரனிடம் தம் எண்ணங்களைப் பரிமாறியுள்ளார். அந்தளவுக்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பில் உத்வேகம் பெற்றுள்ளார்" என்கின்றனர் கார் பவனியில் உடன் வந்தவர்கள்.

சென்னையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு இரவு 10.10-க்கு தான் வந்தார் சசிகலா. உறங்கும் நேரமானதால் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றவர், அடுத்தநாள் கணவர் நடராசனைச் சந்திக்க ஆயத்தமானார். காலையிலேயே மிக நெருக்கமான உறவினர்கள், கிருஷ்ணபிரியா வீட்டில் குழுமத் தொடங்கினர். அவர்களின் நல விசாரிப்புகள் முடிந்தபின்னர், 11 மணியளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார் சசிகலா.

முதல் தளத்தில் உள்ள தமது கணவர் நடராசனை காலை 11.55-க்குச் சந்தித்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அபாய கட்டத்திலிருந்து மீளவில்லை நடராசன். கணவரின் நிலை கண்ட அந்தக் கணம் உடைந்து போனார் சசிகலா. கண்கள் குளமாகின. பலவீனமாக இருந்தாலும் சுயநினைவோடு நடராசன் இருந்ததால், கைகள் உயர்த்தி சைகைகள் மூலம் இருவரும் பேசிக் கொண்டனர்.

15 நிமிட சந்திப்புக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டார் சசிகலா. 'ட்ரக்கியோடமி' கருவி பொருத்தப்பட்டிருந்ததால் நடராசனால் பேச இயலாது. எனவே, தொடர்ந்து மூன்று நாட்களும்(ஒக் 7_ - ஒக் 9 ம் திகதி ) கணவனைச் சந்தித்த சசிகலா, உணர்வுமொழியிலேயே கணவனிடம் பேசிக் கொண்டார். அவர் நலமோடு வீடு திரும்ப கோட்டூர்புரம் சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக் கொண்டார்.

அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, வீடு, மருத்துவமனையில் பார்வையாளரைச் சந்தித்து பேசக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால், அதை முறையாகவே கடைபிடித்துள்ளார் சசிகலா" என்கின்றனர் உளவுப்பிரிவினர்.

'நீங்கள் வளர்த்து விட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள்' என்றும் பலரும் கூற அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சசிகலா, ஒருகட்டத்தில், "நான் பார்க்காத சோதனையா? நான் அம்மாவிடம் (ஜெயலலிதா) அரசியல் கற்றவள். ஒருவர் பதவியில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள், இல்லாத போது எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நான் அறிவேன்.

யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதையும் நான் அறிவேன். இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்கள்" என்று பதிலளித்துள்ளார். குரல் உடைந்திருந்தாலும் உறுதி குறையவில்லை" என விவரித்தார்கள் மன்னார்குடியிலிருந்து வந்திருந்த சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள்.


Add new comment

Or log in with...