Home » அட்டாளைச்சேனை புறத்தோட்டத்தில் கிறிசலிஸ் நிறுவனத்தினால் அபிவிருத்தி

அட்டாளைச்சேனை புறத்தோட்டத்தில் கிறிசலிஸ் நிறுவனத்தினால் அபிவிருத்தி

by sachintha
October 25, 2023 12:08 pm 0 comment

கிறிசலிஸ் நிறுவனத்தின் உதவியுடன் அட்டாளைச்சேனை புறத்தோட்டம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதை புனரமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் திறப்புவிழா சமீபத்தில் நடைபெற்றது.

புறத்தோட்டம் சனசமூக நிலையத்தின் தலைவர் யூ.எல்.சிப்லியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முசாபிர், அட்டாளைச்சேனை பிரதேசசபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ், கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலிசா குணசேன, தொடர்பாடல் முகாமையாளர் தேசமன், கிழக்கு மாகாண நிழ்ச்சித்திட்ட முகாமையாளர் யூ.எல்.சம்சுதீன், தொழில்நுட்ப ஆலோசகர் விமன்சா சொய்சா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த அதிதிகளுக்கு சனசமூக நிலையத்தின் தலைவர் யூ.எல்.சிப்லியா தலைமையில் கிராம மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. பாதை புனரமைப்பிற்கான பதாகையை அதிதிகள் திரைநீக்கம் செய்ததுடன், அதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் உரையாற்றினர். இறுதியாக இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலிசா குணசேன ஈடுபட்டார்.

இங்கு புறத்தோட்டம் சனசமூக நிலைய நிர்வாக சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் சனசமூக நிலையத்தின் அபிவிருத்திக்காக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்போடு உள்ளூர் ஆளுகையில் பெண்களின் வகிபாகம் எனும் மூன்று வருட செயல்திட்டத்தை கிறிசலிஸ் நிறுவனம் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது. இதன் காரணமாக பல விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக தாங்கள் மாறியுள்ளதாக இங்கு பெண்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

மக்கள் பங்கேற்புடனான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வாய்க்கால்கட்டு பாதைக்கான புனரமைப்பு வேலைத்திட்டத்தை புறத்தோட்டம் சனசமூக நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மேற்பார்வையில் மேற்கொண்டிருந்தது. இப்பாதை வேலைத்திட்டத்திற்காக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரதேசசபை பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு 15 சனசமூக நிலையங்கள் ஊடாக இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எம்.எப்.நவாஸ்…

(திராய்க்கேணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT