மாகாண சபை தேர்தல் சட்டமூலம் உரியவகையில் நிறைவேற்றப்பட்டது | தினகரன்

மாகாண சபை தேர்தல் சட்டமூலம் உரியவகையில் நிறைவேற்றப்பட்டது

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் உரிய வகையில் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். சில ஊடகங்கள் இது தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்த சபாநாயகர், இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற ஒருபோதும் தேவையற்ற விதத்தில் பாராளுமன்ற நேரம் மேலதிமாக பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

விசேட பாராளுமன்ற அமர்வு நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியது. தினப் பணிகளைத் தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர் மேலும் குறிப்பிட்டதாவது,

2017 செப்டம்பர் (20) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிய விதம் தொடர்பில் தவறான தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெ ளியிடப்பட்ட செய்திகள் மூலம் இது புலனாகிறது.

அவ்வாறான ஊடக அறிக்கைகளில் பல்வேறு தவறான விடயங்கள் குறிப்பிடப்பட்டன.இது தொடர்பான உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

பாராளுமன்ற குழு நிலையின் போது இந்த சட்ட மூலத்திற்கு முன்வைக்கப்படும் திருத்தங்கள் தொடர்பாக பிரதமரின் தலைமையில், அன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பாராளுமன்ற விவகார கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு அறிவூட்டப்பட்டது. அதன் பின்னர் அதனுடன் தொடர்புள்ள திருத்தங்களை சட்டமாக்கும் நடவடிக்கைக்கு குறிப்பிடத்தக்க நேரம் பிடித்தது. அதற்கு இரவு 7.45 வரை நேரம் பிடித்தது.

பாராளுமன்றம் கூடும் நேரம் எக்காரணம் கொண்டும் தேவையின்றி நீடிக்கப்படவில்லை. குறித்த திருத்த சட்டமூலத்திற்கான சகல திருத்தங்களும் உரிய வகையில், பாராளுமன்றத்திற்கு கிடைத்தவுடன் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

ஊடகங்கள், இதனை விட முறையாகவும் சரியாகவும் உண்மை தன்மையை ஆராய்ந்து செயற்படுவது உகந்தது எனத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதே வேளை மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனக்கு பிரதி யொன்று கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் நேற்று அறிவித்தார்.

மாகாண சபை தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது எனவும், அதனை ரத்து செய்யுமாறும் கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...