Home » போதைவஸ்து கடத்தலை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் அவசியம்!

போதைவஸ்து கடத்தலை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் அவசியம்!

by sachintha
October 25, 2023 6:00 am 0 comment

இலங்கைக்குள் கடல் வழியாகக் கடத்திக் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட ஒரு தொகைப் போதைப்பொருள் கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்காண்ட நடவடிக்கையின் ஊடாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரும் ஒருங்கிணைந்து காலிக்கு மேற்கே சுமார் 91 கடல் மைல் தொலைவில் மேற்கொண்ட நடவடிக்கையின் ஊடாக ஆழ்கடல் படகொன்றில் இருந்து 225 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்படகில் இருந்த ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் ஆயிரம் கிலோ கிராம் போதைப்பொருட்களை கடல் வழியாக இலங்கைக்குள் கடத்திக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியே நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்து இருக்கின்றனர்.

இப்போதைப்பொருள் தொகையில் எஞ்சிய தொகையையும் விரைவில் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கடற்படையினர், இதன் ெபாருட்டு கடலில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நாட்டுக்குள் பாரிய தொகை போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வர முயற்சிக்கப்பட்டிருப்பதை சாதாரணமான விடயமாக நோக்க முடியாது. நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட போதிலும் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருகிறது. அதன் பயனாகவே இக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

ஆன போதிலும் ஆழ்கடல் மீன்பிடிப் படகைப் பயன்படுத்தியே சூட்சுமமான முறையில் இப்போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்திருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயற்பாடாகும். போதைப்பொருள் கடத்தலே முற்றிலும் கடும் குற்றத்திற்குரிய செயல். அப்படியிருக்கையில் இச்செயலுக்கு ஆழ்கடல் மீன்பிடிப் படகை பயன்படுத்தி இருப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதன் விளைவாக ஆழ்கடல் படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினரின் சந்தேகங்களுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படவே செய்கிறது.

ஆனால் தென்பகுதி கடற்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரவென ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்முயற்சிகளும் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினரால் பல தடவை முறியடிக்கப்பட்டுள்ளன.

என்றாலும் இம்முறை இவ்வளவு தொகைப் போதைப்பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ‘ஓடரை’ பூசா அதிபாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்கள்தான் வழங்கி இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலையில் இருந்த நிலையில் சட்டவிரோத போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர ஓடர் செய்வதென்பது இலேசான காரியமல்ல. இது தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மக்களது கருத்தாகும்.

ஆனால் ஆயிரம் கிலோ கிராம் போதைப்பொருள் என்பது சாதாரணதொரு தொகை அல்ல. இவ்வாறு பெருந்தொகை போதைப்பொருள் நாட்டுக்குள் வந்து சேருமாயின் நாட்டின் நிலைமை என்னவாகும்? அதுவே சமூக ஆர்வலர்களது கேள்வியாகும்.

ஏற்கனவே சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு பலர் ஆரோக்கிய ரீதியிலான நெருக்கடிக்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். அதேநேரம் சமூக, கலாசார சீரழிவுகளுக்கு போதைப்பொருள் குற்றங்கள் பெரிதும் பங்களிக்கக் கூடியனவாக உள்ளன.

ஹெரொயின் போன்ற இப்போதைப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்துதான் இந்நாட்டுக்குள் கடத்தி வரப்படுகின்றன. அவற்றில் இப்போதைப்பொருளும் அடங்கும்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை அடங்கலாக பிராந்திய நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளன. அதனால் போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியமும் முக்கியத்துவமும் பரவலாக உணரப்பட்டுள்ளன. இது தொடர்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே போதைப்பொருட்களைக் கடல் வழியாகக் கடத்தி வர மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கட்டுப்படுத்தவென பரந்த அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் நிமித்தம் பிராந்திய நாடுகளது ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளும் போது போதைப்பொருட் கடத்தலைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு போதைப்பொருள் குற்றங்களின் தாக்கங்கள், பாதிப்புக்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும். அதன் ஊடாக போதைப்பொருட்களின் பாவனை உள்ளிட்ட குற்றங்களில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT