கால்பந்தாட்டப் போட்டி; அனைத்து நட்சத்திரங்கள் அணி வெற்றி | தினகரன்

கால்பந்தாட்டப் போட்டி; அனைத்து நட்சத்திரங்கள் அணி வெற்றி

கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணிக்கும் அனைத்து நட்சத்திரங்கள் அணிக்கும் இடையில் மருதானை ஸாஹிரா மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் அனைத்து நட்சத்திரங்கள் அணி கடும் முயற்சியின் பின்னர் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.

மருதானை ஸாஹிரா கல்லூரி கால்பந்தாட்ட விளையாட்டில் 100 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டும் ஹாஹிரா சுப்பர் 16 போட்டிகளுக்கு முன்னோடியாகவும் நடைபெற்ற இப் போட்டியின் 56ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய கால்பந்தாட்ட அணித் தலைவர் அமானுல்லாஹ் போட்ட கோல் அனைத்து நட்சத்திரங்கள் அணியை வெற்றி அடையச் செய்தது.

அனைத்து நட்சத்திரங்கள் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரர்கள், றக்பி தேசிய வீரர்கள், பயிற்றுநர்கள் ஆகியோர் விளையாடினர்.

மஹேல ஜயவர்தன தலைமையிலான கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணி இப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதைக் காண முடிந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அங்குரார்ப்பண போட்டியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்த மஹேல ஜயவர்தனவும் உப்புல் சந்தனவும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகளும் ஷேன் பெர்னாண்டோவின் முயற்சியும் கைகூடாமல் போயின.

இடைவேளையின் பின்னர் அனைத்து நட்சத்திரங்கள் அணியினரின் ஆதிக்கம் மேம்படத் தொடங்கியது. பல கோர்ணர் கிக்குகளை அடுத்தடுத்து வென்றபோதிலும் அவற்றால் பயனற்றுப் போயின. 48ஆவது நிமிடத்தில் அமானுல்லாஹ்வின் பலமான கோர்ணர் கிக்கை தனது தலையால் முட்டி கோல் போடுவதற்கு ரீஸா முபாரக் எடுத்த முயற்சி தவறியது.

போட்டி முடிவடைய நான்கு நிமிடங்கள் இருந்தபோது அஜித் வீர் சிங் இடது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை நோக்கி கிரிக்கெட் ஸ்டார் கோல் காப்பாளர் நகர்ந்த போதிலும் அமானுல்லாஹ் அற்புதமாக செயற்பட்டு பந்தை கோலினுள் புகுத்தி அனைத்து நட்சத்திரங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பாடகர் சந்துஷ் வீரமான் தலைமையிலான அனைத்து நட்சத்திர அணியில் ஹமீடியா முகாமைத்துவப் பணிப்பாளர் பௌஸுல் ஹமீத், 1995 சார்க் தங்கக் கிண்ண நட்சத்திரம் அமானுல்லாஹ், எம். இம்ரான், அமானுல்லாஹ்வின் இளைய சகோதரர் எம். றஹுமான், றஹ்மானின் மகன் முர்ஷித், முன்னாள் தேசிய றக்பி வீரர்களான நாலக்க வீரக்கொடி, பாஸில் மரிஜா, ரீஸா முபாரக் ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெற்றனர்.

கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணியில் மஹேல ஜயவர்தன, உப்புல் சந்தின, சமிந்த வாஸ், ரவீந்திரன் புஷ்பகுமார, சஜித் பெர்னாண்டோ, தரங்க பரணவித்தான, ஷேன் பெர்னாண்டோ ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெற்றனர். ஸாஹிரா பழைய மாணவத் தலைவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இப் போட்டிக்கு கூல் ப்ளனெட் நிறுவனம் பூரண அனுசரணை வழங்கியது. 


Add new comment

Or log in with...