2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் படுதோல்வி | தினகரன்

2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் படுதோல்வி

தென்ஆபிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் பங்களாதேஷ் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை 0- -2 என இழந்தது.

தென்ஆபிரிக்கா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 6-ம் திகதி ப்ளோயம்ஃபோன்டின் மைதானத்தில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி தென்ஆபிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (113), மார்க்கிராம் (143), அம்லா (132) மற்றும் டு பிளிசிஸ் (135 ஆ. இல்லை) ஆகியோரின் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ஒட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் தென்ஆபிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பங்களாதேஷ் 426 ஓட்டங்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.

இதனால் பங்களாதேஷை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடுடாறு டு பிளிசிஸ் அழைத்தார். 426 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் பங்களாதேஷ் துடுப்பாட்டவீரர்கள் திணறினார்கள். இதனால் 172 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்ஆபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சிலும் ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆபிரிக்கா 2--0 எனக் கைப்பற்றியது. இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த டீன் எல்கர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 


Add new comment

Or log in with...