“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் | தினகரன்


“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ் முடிந்தப்பிறகு தற்போது என்ன செய்கிறார்?

கணேஷ் வெங்கட்ராம்

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவேயில்ல. வெளியில வந்து பார்த்தா எனக்கு பெரிய ஷாக். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லாம உலகம் முழுக்க வசிக்க தமிழ் மக்கள் எல்லாரும் இந்த ஷோவைப் பார்த்திருக்காங்க. பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட்டாகியிருக்கு. நிறைய ஈவெண்ட்டுக்கு கூப்பிடுறாங்க, பல ஸ்கிரிப்டுகள் வருது செம பிஸியா இருக்கேன். வெளியில வந்து ரெண்டு நாள் என் ஃபேமிலிக்கூடதான் இருந்தேன். அதுக்கப்பறம் ஃபுல்லா வெளியிலதான் இருக்கேன். இன்னும் ஹாட் ஸ்டார்ல ஷோவைப் பார்க்கவேயில்ல. இனிமேல்இன்னும் பத்து நாள்கள்: கழிச்சுதான் ஃபிரியாவேன்போல.’’

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த 100 நாள்கள் எப்படி இருந்தது..?

“என் வாழ்க்கையில அந்த 100 நாள்களை மறக்கவே மாட்டேன். ஏன்னா, நான் ஜாய்ண்ட் ஃபேமிலியில இருந்தது கிடையாது. எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா, அக்கா மட்டும்தான். மும்பையில இருந்து நான் சென்னைக்கு வந்தபோதும் தனியாதான் ரூம்ல இருந்தேன். கல்யாணத்துக்கு அப்பறம் நானும் நிஷாவும் மட்டும்தான். இப்படி அதிகமான ஆள்களோட நான் பழகினதே இல்ல. பிக் பாஸ் வீட்டுக்குள்ள அந்த 14 பேரோட ஒண்ணா, ஒரே குடும்பமா இருந்தது நல்ல அனுபவமா இருந்தது. கூட்டுக்குடும்பத்துக்காக ஏங்கிய எனக்கு பிக் பாஸ் அதை நிறைவேற்றி இருக்கு. 

வெளியில இருக்கும்போது நம்மளோட வேலைகள், நமக்கான தேவைகள்னு ஓடிட்டு இருப்போம். ஆனா, நாங்க அந்த வீட்டுக்குள்ள இருந்த 100 நாளும் மத்தவங்க என்னப் பண்றாங்க, அவங்களுக்கான தேவை என்னான்னு யோசிச்சோம். அதுவே புது அனுபவம்தான். நிறைய கத்துக்கிட்டேன். போட்டியாளர்கள் எல்லாருமே சினிமா பிரபலங்களா இருந்தாலும் ஒவ்வொரு ஆளும் வேற வேற ஊர், வேற வேற ஸ்டேட்ல இருந்து வந்தவங்க. அவங்ககிட்ட இருந்து அவங்களோட கலாசாரத்தை தெரிஞ்சுக்கிட்டேன். ”

தொடர்ந்து படம் பண்ணிட்டு இருக்கும்போது 100 நாள்கள் ப்ரேக் எடுத்துக்க எப்படி தைரியம் வந்தது..?

கணேஷ் வெங்கட்ராம்

“அந்தத் தைரியம் கமல் சார்னாலதான் வந்தது. முதலில் இந்த ஷோ பத்தி விஜய் டிவி என்கிட்ட பேசும்போது நான் வேணாம்னு சொல்லிட்டேன். எனக்கு இந்த ஷோமேல நல்ல அபிப்ராயம் இல்ல. அப்பறம் கமல் சார் இந்த ஷோவைப் பண்றாங்கனு கேள்விப்பட்டதும் ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, அவர் சாதாரணமா ஒரு ப்ராஜெக்ட்குள்ள போக மாட்டார். அவர் இந்த ஷோ பண்றனாலதான் எனக்கு 100 நாள் ப்ரேக் எடுத்துக்கிற தைரியம் வந்தது. அப்பறம், எனக்கு இந்த ஷோமேல இருந்த சந்தேகத்தை எல்லாம் விஜய் டிவி ரொம்ப சரியா க்ளியர் பண்ணிட்டாங்க. அதுமட்டுமில்லாம, நான் கமிட் பண்ணியிருந்த இரண்டு படங்களும் நவம்பர், ஜனவரியில்தான் ஷூட் பண்றதா இருந்தாங்க. அதுனால தைரியமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். ’’

பிக் பாஸில் போட்டியாளர்கள் எல்லாரும் உங்களை ஜென்டில்மேன்னு சொல்லும்போது உங்க வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது..?

“அம்மா, அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எல்லாரும் அவங்ககிட்ட உங்க பையனை நல்லா வளர்த்திருக்கீங்கனு சொன்னாங்க. நான் 100 நாள்கள் அங்க இருக்கும்போது நிஷா ரொம்ப தைரியமா இருந்தாங்க. அதுக்காக நிறைய பேரு நிஷாவுக்கும் வாழ்த்து சொன்னாங்க. நானும் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஏன்னா, அபியும் நானும் படத்தில் என்னை ஜோகிந்தர் கிங்கா, உன்னைப்போல் ஒருவன் படத்தில் அரிஃப் கானா, தனி ஒருவன் படத்துல சக்தியா பார்த்திருப்பாங்க. ஆனா யாரும் உண்மையான கணேஷை பிக் பாஸுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. இப்போ இதுதான் என் கேரக்டர், கணேஷ் இப்படித்தான் இருப்பார்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுல நான் செம ஹாப்பி.’’

உங்களுக்கு கோபம் வருமா ப்ரோ..?

“எல்லா மனுஷக்கும் கோபம் கண்டிப்பா வரத்தான் செய்யும் ப்ரோ. ஆனா, அந்தக் கோபத்தை எப்போ வெளிப்படுத்துறோம், அதுனால எதுவும் உபயோகம் இருக்கானு பார்க்கணும். எல்லா இடங்களிலும் தேவையில்லாம கோபப்பட்டால் எதுவும் ஆகப்போறது  இல்ல. எனக்கு பொய் சொன்னா பிடிக்காது, ஒழுக்கம் இல்லாம இருந்தால் பிடிக்காது. அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கும்போது எனக்கு கோபம் வரும்.’’

பிக் பாஸ் வீட்டுல இருக்கும்போது இதை நான் பண்ணிருக்கணும்னு நினைக்கிற விஷயம்..?

“பரணி விஷயத்துல நான் சும்மா இருந்திருக்கக் கூடாது. அவர் சுவர் ஏறி குதிக்க போனபோது நான் அவரை தடுத்திருக்கணும். நான் அதை பண்ணலை. அதுதான் நான் பண்ணுன தப்பு. 100வது நாள் எல்லா போட்டியாளர்களும் வீட்டுக்கு வந்தப்போ பரணி என்னைக் கட்டிப்பிடிச்சு, ‘இந்த வீட்டுல நீங்கதான் யாருக்கும் துரோகம் பண்ணாத ஆளு’னு சொன்னார். அப்போதான் பரணி என்னை புரிஞ்சிக்கிட்டார்னு தோணுச்சு.”

பிக் பாஸ் சீசன் 2ல யார் யார் கலந்துக்கிட்டா நல்லாயிருக்கும்னு நீங்க ஃபீல் பண்றீங்க..?

“யார் யார்னு பாயிண்ட் அவுட் பண்ணி என்னால சொல்ல முடியலை. ஆனா, முதல் சீஸன் மாதிரி எல்லாருமே சினிமா பிரபலங்களா இல்லாம, போலீஸ் டிப்பார்ட்மெட்டில் ஒருத்தர், அரசியலில் இருந்து ஒருத்தர், விளையாட்டுத்துறையில் இருந்து ஒருத்தர், சினிமாவுல இருந்து ஒருத்தர்னு பல துறைகளில் இருந்து வந்தா செமையா இருக்கும். ஒவ்வொருத்தரோட எண்ணமும் எப்படி இருக்கு, எப்படி யோசிக்கிறாங்கனு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரொம்ப சீரியஸ் பர்ஷனா இல்லாம கொஞ்சம் ஜாலியான பர்ஷனா இருந்தா கலகலப்பா இருக்கும்.”

- மா.பாண்டியராஜன்


Add new comment

Or log in with...