ஹ' தோட்டை ஆர்ப்பாட்டம்; 3 பொலிசார் காயம்; 26 பேர் கைது | தினகரன்


ஹ' தோட்டை ஆர்ப்பாட்டம்; 3 பொலிசார் காயம்; 26 பேர் கைது

(கோப்பு படம்)
 
ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமானநிலையத்தை மிக நீண்ட கால அடிப்படையில் குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் இன்று (06) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோர், ஹம்பாந்தோட்டை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வீதிகளின் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கும், மாகம்புர துறைமுகத்தை சீனாவுக்கும் வழங்குவதாக தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், பொலிசாரால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
 
குறித்த தடை உத்தரவில், ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகத்திற்கு செல்லும் வீதி ஆகியவற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் அப்பகுதிகளில் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
 
ஆயினும், இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.
 
இதனை அடுத்து, அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிசாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது ஏற்பட்ட பதட்ட நிலைமை காரணமாக, 3 பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

Add new comment

Or log in with...