இலங்கைப் பெண்மணிக்கு பிலிப்பைன்ஸின் உயர்விருது | தினகரன்

இலங்கைப் பெண்மணிக்கு பிலிப்பைன்ஸின் உயர்விருது

ந்த வருடம் 'ரேமன் மக்ஸஸே' எனப்படும் உயர்ந்த விருது இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.ஆசிய நாடுகளில் விழிப்புணர்வு, உயர்ந்த சேவை, சமூக வழிநடத்தல் என்ற துறைகளில் அளப்பரிய சேவையாற்றுபவர்களைக் கௌரவிக்கும் முகமாக 'ரேமன் மக்ஸஸே' விருது வழங்கப்படுகிறது.

இந்த உயரிய விருது இவ்வருடம் திருமதி. கெத்ஸி சண்முகம் அவர்களுக்கு மணிலா மாநகரில் வைத்து வழங்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏழாவது பிரதமரான ராமொன் டெல் ஆசிய நாடுகளில் உயரிய சேவை செய்து அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தவர்களை கௌரவிக்குமுகமாக ஏற்பாடு செய்த விருதே 'ரேமன் மக்ஸஸே' விருதாகும்.

இந்த வருடம் அதாவது 2017ம் ஆண்டிற்குரிய விருதை திருமதி கெத்ஸி சண்முகம் பெற்று இலங்கை நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இதுவரை 10 இலங்கையர் இவ்விருதினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு திரு. ஆனந்த கலபதி என்பவரே கடைசியாக இவ்விருதினைப் பெற்றர்.

திருமதி கெத்ஸி சண்முகம் தொலஸ்பாகே, நாவலப்பிட்டியில் 1934ம் ஆண்டு கிரேக்ஹெய்க் தோட்டத்தில் த​ைலமை எழுதுவினைஞரின் முத்த மகளாகப் பிறந்தார்.

இவர் ஆரம்பக் கல்வியை கண்டி மோபிரே கல்லூரியில் பயின்று அந்த பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணியாற்றினர். திருமணத்தின் பின்னர் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து பணியாற்றினர். இவர் குழந்தைகளுக்கு காட்டிய அன்பும், பரிவும் அருட்தந்தை மெர்வின் பொனென்டோ அவர்களை மிகவும் கவர்ந்தது. மனித நேயம் சமூகத்தின் மேலிருந்த கருணை என்பவை தாண்டியது அவரது பணிகள். இந்தப் பாடசாலையில் மிகவும் துன்பங்கள் மிகுந்த குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு உதவினார்.

இப்பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் இவரது சேவை குறையவில்லை. யுத்தத்தினால் துவண்டு போயிருந்த இலங்கைக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு ஆதரவு தந்து, அவர்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனை வழங்கி சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றினர்.

இதற்காக இந்தியா, கம்போடியா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்குச் சென்று போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது பற்றி பயின்று வந்தார். வவுனியா, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கு யுத்த சூழ்நிலையிலும் பயணம் செய்து அயராது சேவை செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யுத்த சூழ்நிலையில் திருமதி சண்முகம் எதிர்கொண்ட நிலைமைகள் அவரை இன்னும் நிறைய சமூக சேவை செய்யத் தூண்டியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட 80 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இவர் அன்புடன் அரவணைத்​ை போர் விதவைகள் இவரை அன்பாக 'அம்மா' என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுபவங்களுடன் சமூகத்திற்கு இவர் கூறும் அறிவுரை ஒன்றாகும். "இலங்கை ஒரு சிறிய நாடு இயற்கை அனர்த்தங்களான சுனாமி, மண்சரிவு, வெள்ளம் என்று ஏற்கனவே பல இடையூறுகள் இந் நாட்டில் ஏற்படுகின்றன. இதற்கிடையே நாம் சண்டையிடாமல் சமாதானமாக வாழ வேண்டும்" என்பதே இவருடைய வேண்டுகோளாகும்.

ஆகவே இலங்கை நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ள திருமதி கெத்தஸி சண்முகம் என்பவருக்கு தனது ஆரம்பக் கல்விக்கூடமான கண்டி மோபிரே கல்லூரியானது கடந்த 15ம் திகதி மேற்படி கல்லூரி மண்டபத்தில் மதப்பெரியார்கள், பெருந்திரளான பழைய மாணவர்கள் மத்தியில் ஒரு சிறப்பான கௌரவிப்பு விழாவை நடத்தியது.

இந்தப் பாடசாலையுடன் நெருங்கிய பாசமுள்ள திருமதி. கெத்ஸி சண்முகம் இளவயதில் தனது தாயாரை இழந்த போது மோபிரே கல்லூரி தன்னை அரவணைத்து தாயாக இருந்ததை மறக்க முடியாது என்றும், இக்கல்லூரியின் தற்போதைய அதிகராகக் கடமை புரிகின்ற திருமதி டி. மனுவல் சிறந்த கடமைகளை முன்னெடுத்து வருவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...