வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் 5 வருட அபிவிருத்தித் திட்டங்கள் | தினகரன்

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் 5 வருட அபிவிருத்தித் திட்டங்கள்

 ஜனவரி மாதம் 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பெற்றுக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் பேரில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய மற்றும் நல்லிணக்க காரியாலயமொன்று அமைக்கப்பட்டது. அதில் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமது தலைமையின் கீழ் வடக்கு கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளார்.

அக்காரியாலயம் மூலம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக விரிவான ஐந்து ஆண்டு மாவட்ட அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாவட்டங்களின் செயலாளர்களூடாக செய்யப்பட்ட ஆய்வின்படி 8 மாவட்டங்களிலும் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாழ்க்கை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் கிராம அபிவிருத்தித் திட்டம், கடன் ஆலோசனை முறை, கிராமிய அடிப்படை வசதிகள், மீன்பிடி மற்றும் சமூக நீர் வழங்கல் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத் திட்டத்தின் மூலம் வீட்டுத் தலைவியாக உள்ள பெண்கள், விதவைகள், வேலையற்ற இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். அரச மற்றும் தனியார் வங்கிகளினூடாக தனி நபரொருவர் குறைந்தபட்சம் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா வரை கடனைப் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து தொழில் திட்டங்களுக்கும் மொத்த கடன் தொகையில் 25 சதவீதத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சு வழங்குவதோடு அதற்கான வட்டியை அக் காரியாலயமே வழங்கும். அவ்வாறான 400 திட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் காரியாலயம் 1100 மி்ல்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. அத்திட்டங்கள் அனைத்தும் 2017ம் ஆண்டு முடிவடைவதற்குள் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 இலட்சம் பேரின் அடிப்படைத் தேவைகளும் மற்றும் அவர்களின் பொருளாதாரமும் வளம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லிணக்கக் காரியாலயத்தில் பூரண அனுசரணையுடனும் ஆலோசனையுடனும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்கால பரம்பரையை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும். துளி நீர் வழங்கல் விவசாய பயிற்சியின் கீழ் சிறிய அளவிலான விவசாயிகளின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சம்பிரதாய விவசாய முறைகளைவிட மிகக் குறைந்தளவு நீரினால் நீர் வசதியற்ற கஷ்டப் பிரதேச விவசாயிகளும் இம்முறை மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபடலாம்.

உலர் வலயத்தில் அமைந்துள்ள முன்மாதிரியான விவசாயப் பண்ணைகள் மூன்றில் இரண்டு பண்ணைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான பீடத்தின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அமைந்துள்ளன. மற்றையது மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முதற்கட்டமாக ஒரு மாவட்டத்தில் 100 விவசாயிகள் வீதம் 300 விவசாயிகளுக்கும், மாவட்டத’துக்கு 30 விவசாய திட்ட அதிகாரிகள் வீதம் 90 பேருக்கும் மாவட்டத்துக்கு 3 பேர் வீதம் விவசாய உபகரண விற்பனையாளர்கள் 9 பேருக்கும் விவசாய தொழில்நுட்பப் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தொழில் நுட்பத்தின் மூலம் மரக்கறி, தென்னை, வாழை போன்ற வர்த்தக பயிர்களை பயிரிட்டு இரண்டு மூன்று மடங்கு இலாபத்தைப் பெறமுடியும். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தூர்ந்து போன பழைய குளங்களை மீண்டும் புனரமைத்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

காலத்துக்குக்கு காலம் வாடைக்காற்று, கச்சான் காற்று காரணமாக கிணற்று நீரில் உப்பு நீர் கலக்கின்றது. இதனால் அப்பிரதேச மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றார்கள். இதற்கு தீர்வாக தாது உப்பு தடைகளை போட நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மழை நீர்த் தாங்கிகளை வழங்க அக் காரியாலய தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனைத்துக் குடிமக்களும் பொருளாதார சமூக கலாசார மற்றும் அரசியல் ரீதியாக மதிக்கப்படுகின்ற அனைத்து இலங்கையர்களும் சகவாழ்வுடனும், ஒற்றுமையுடனும் உறுதியான பலத்துடன் வாழ தேவையான சூழலை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

ஹேமமாலா ரன்துனு


Add new comment

Or log in with...