பேதமின்றி கரம்கோர்ப்போம் | தினகரன்

பேதமின்றி கரம்கோர்ப்போம்

 அரசாங்கம் நாட்டில் உணவுற்பத்திப் புரட்சியொன்றை ஆரம்பித்திருக்கின்றது. ஆசியாவில் அரிசியால் தன்னிறைவு பெற்ற நாடாக இலங்கை ஒருகாலத்தில் பெயர்பெற்று விளங்கியது. அன்று தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதற் பணியாக விவசாயத்தின் பக்கம் மக்களை தூண்டியவராவார். இளைஞர்களை வயலுக்கும், விவசாய காணிகளுக்குப் செல்ல ஊக்குவித்தார். அரிசியிலும், உணவுற்பத்தியிலும் முழு நாட்டையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தார். இதன் பயனாக எமது நாட்டிலிருந்து அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஒரு பொன்னான காலமும் இருந்தது.

அன்று காலை, பகல், இரவு என மூன்று வேளையும் சோறு சாப்பிட்ட காலமாகவே இருந்தது. நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது இந்த உண்மையை கண்டறிய முடியும். டி. எஸ். ஸுக்குப் பின்னர் அவரது புதல்வர் டட்லி சேனாநாயக்கவும் தமது ஆட்சிக் காலத்தில் உணவுத்பத்திக்கும், அரிசி உற்பத்திக்குமே முன்னுரிமை கொடுத்தார். விவசாயத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர் படித்த இளைஞர்களை அணிதிரட்டி விவசாயப் படையொன்றையே ஸ்தாபித்தார். மகியங்கனை, பொலன்னறுவை, அனுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களில் காணப்பட்ட பெற்றுத்தரைகளை விவசாயம் கொழிக்கும் பிரதேசங்களாக மாற்றுவதற்கு இந்த விவசாயப் படை வீரர்களை முழுமையாக ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்டார்.

டட்லியின் ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தினார். டி. எஸ். டட்லி காலம் என்பது எமது நாடு பொன்கொழிக்கும் நாடாக மிளிர்ந்தது. அரிசி, மரகறி உள்ளிட்ட எந்த உணவுப் பொருளுக்கும் எந்தவித தட்டுப்பாடும் காணப்படவில்லை. அனைத்தும் தாராளமாகக் கிடைத்தது.

இது ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் மேலும் ஊக்குவிக்கப்பட்டது. நெல் அறுவடைக் காலத்திலும், பயிரிடும் காலத்திலும் தமது அரசின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் தாமும் வயலில் இறங்கி விவசாய மக்களுடன் இணைந்து விவசாயத்துக்கு ஊக்கமளித்தார். ​ஜே. ஆர் ஆட்சியின்போதே முதற்தடவையாக ஏர்பூட்டு விழா தொடக்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குப் பின்னர், சந்திரிகா அம்மையார் தலைமையிலான சுதந்திரக் கட்சி (கூட்டணி) ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக விவசாயம், அரிசி உற்பத்தி பின்னடைவைக் கண்டது. சந்திரிகாவின் தாயார் சிறிமா பண்டாரநாயக்க ஒரு தேர்தலின்போது ஜே. ஆர். தலைமையிலான ஐ. தே. கவை தோற்கடிக்கும் பொருட்டு அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக சந்திரனிலிருந்து அரிசி கொண்டு வருவதாகக் கூட தெரிவித்திருந்ததை மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

ஆனால் அரிசி, உணவு உற்பத்தியின் இன்றைய நிலை என்ன? அரிசிக்காக நாம் வெளிநாட்டிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது எமது கடந்தகால வரலாறாகும். 2015 ஜனவரி 8ல் மலர்ந்த நல்லாட்சி அரசாங்கம் அதன் கோட்பாடுகளில் ஒன்றான வறுமையை ஒழிக்கும் திட்டத்துக்கு கூடுதல் கவனம செலுத்தி வருகின்றது. உணவுற்பத்திப் புரட்சியை இப்போது ஆரம்பித்துள்ளது. நாட்டின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு மத்தியிலும் விவசாயத்துக்கு அரசு முன்னுரிமையளித்துள்ளது.

இன, மத, மொழி, அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் கீழ் இந்த விவசாயப் புரட்சியில் ஒன்றிணையுமாறு அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய உணவுற்பத்திப் புரட்சி தொடர்பாக இடம்பெற்ற ஊடக மாநாட்டில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜனாதிபதியின் செய்தியை முன்வைத்து கருத்துத் தெரிவித்தபோது ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தயாரித்திருக்கும் உணவுற்பத்திப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாக நாடு பூராவும் முன்னெடுப்பதற்கு அரசு உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

எமது நாட்டில் இன்று விவசாயம் செய்யப்படாத வயல்கள் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ஹெக்டயார் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வயல்கள், தரிசு நிலங்களை மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்தக் காணிகள், வயல் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுமானால் அவற்றின் உரிமையை அவர்களிடமே வைத்து விவசாயிகளைக் கொண்டு அங்கு விவசாயம் செய்யும் திட்டத்தை அரசு அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

நாட்டு மக்கள் இன்று உண்ணும் உணவு விஷம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. உணவுற்பத்தி இயற்கை நிலையிலிருந்து மாற்றம் பெற்று செயற்கையாக மாறியுள்ளது. நாட்டில் வறுமையை ஒழிப்பதன் பொருட்டு அரசு செலுத்தி வரும் கவனிப்பு வரவேற்கத்தக்கதாகும். மீண்டும் எமது நாடு அரிசியிலும், உணவுற்பத்தியிலும் தன்னிறைவு காணவேண்டும். வெளிநாட்டில் கையேந்தி எதிர்காலத்திலும் நாமும், எமது சந்ததியினரும் கடனாளிகளாக இருக்கக்கூடாது. “சுய உற்பத்தியின் மூலம் உணவில் தன்னிறைவு” என்ற அரசின் இலக்கு வெற்றியடைய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கரம் கோர்க்க வேண்டும். நாடு மீண்டும் செல்வம் கொழிக்கும் பூமியாக மாறவேண்டும்.

இயற்கை வளம நிறைந்த எமது நாடு உயிரப்பற்ற கட்டாந்தரையாக விட முடியாது இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்தி பொன் கொழிக்கும் பூமியாக மாற்றவேண்டும். நல்லாட்சி அரசின் இந்த தேசிய உணவுற்பத்திப் புரட்சி வெற்றியடைய ஒத்துழைப்போமாக.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...