வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அ.இ.மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு | தினகரன்

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அ.இ.மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு

தமிழ் தரப்புக்கள் வடக்கு.கிழக்கு மாகாணங்களை இணைக்க கோருவதில் எந்த தவறும் இல்லை எனத்தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இவ்விரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற (04) முஸ்லிம் புத்திஜீவிகளுடனான விஷேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்: தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்த தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. ஆனால் வடக்கு,கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் அமுங்கிப்போகும் அபாயமுள்ளது. இந்நிலையில் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு காணி பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட்டால் நிலைமைகள் இன்னும் மோசமாகும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. புலிகளின் சிந்தனையில் வளரும் அரசியல்வாதிகள் சிலரின் போக்குகள் வடக்கு முஸ்லிம்கைளை மேலும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இணைப்புக்கு ஆதரவளித்தால் பேரினவாதிகளின் நெருக்குதலுக்கு தென்,மேல் மாகாணங்களிலுள்ள முஸ்லிம்கள் அகப்படும் அபாயமுள்ளது.

 நிலைமைகளை நேரில் உணர்பவர்கள் என்பதால் வடக்கு.கிழக்கு இணைப்பை எதிர்க்கிறோம்.கிழக்கில் மூவின மக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாகாண நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனர். வடக்கு, கிழக்கை இணைத்தால் இவ்வொற்றுமை இல்லாது போகும். தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே இக்கோரிக்கை எழுகிறது.

ரதேச காணிப் பிரச்சினைகளை மத்திய அரசாங்கத்தின் காணி அமைச்சரிடம் சென்று தீர்த்துக்கொள்வதனூடாக மாகாண நிர்வாகங்களின் மோதல்களை தவிர்க்க முடியும்.

மாகாண சபைகள் திருத்த சட்டமூலத்துக்கு வாக்களிப்பதில்லை என்ற எமது நிலைப்பாடு, பிரதமருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது. அரசாங்கத்திடம் எம்மை துரோகிகளாக காட்டி அரசிலிருந்து தனிமைப்படுத்த எமக்கெதிராக எடுக்கப்பட்ட முயற்சிகளை புத்திசாதுர்யமாக முறியடித்தோம். பஷில் ராஜபக்ஷவுடன் இரகசிய பேரம் பேசி அரசாங்கத்தை கவிழ்க நாம் சதிசெய்துள்ளதாக புரளிகள் பரப்பப்பட்டன. பல திருத்தங்களை செய்வதென்ற பிரதமரின் இணக்கப்பாட்டில் மாகாண சபை திருத்த சட்டமூலத்துக்கு வாக்களிக்க நேர்ந்தது.

எமது ஆதரவு இல்லாமலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் பலம் அரசுக்கு இருந்ததால், காட்டிக் கொடுப்பிலிருந்து தப்பிக்க இந்த சட்டமூலத்தை ஆதரித்தோம்.அரசியலமைப்பின் வழி நடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள எமது யோசனைகளில் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான பலவிடயங்களும் உள்ளடங்கியுள்ளன.

இவ்வாறான ஒரு யோசனையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்காதமை பெரும் கவலையளிப்பதாகவும அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்தார்.

ஸம்ஸ் பாஹிம் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...