அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! | தினகரன்

அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்!

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

இந்நாட்டில் இனங்களுக்கிடையில் சந்தேகங்கள் தோற்றம் பெறவும் வளர்ச்சியுறவும் இந்த யாப்பும் துணை புரிந்துள்ளது.

இவ்வாறான பின்புலத்தில்தான் இன்றைய காலத்திற்குப் பொருத்தமான அரசியலமைப்பை சகல தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் தயாரித்து அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் நிமித்தம் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளதோடு பல குழுக்களும் அமைக்கப்பட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 21ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது இடைக்கால அறிக்கையே அன்றி அரசியலமைப்பு அல்ல. அதில் அரசியலமைப்புக்கு இணக்கம் காணப்பட்டுள்ள விடயங்களும், இணக்கம் காணப்படாத விடயங்கள் அந்தந்த கட்சிகள் முன்வைத்த யோசனைகளாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.அவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வடக்கு கிழக்கு இணைப்பு யோசனை இணக்கம் காணப்படாத இணைப்பாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

ஆனால் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் இந்நாட்டு அரசியல் அரங்கில் சில விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகின்றது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளும், சில இனவாதிகளும் அவற்றை பெரிதும் தூக்கிப் பிடித்துள்ளனர். அவற்றின் ஊடாக மக்களை பிழையாக வழிநடத்தி அற்ப அரசியல் இலாபம் தேடுவதே அவர்களது நோக்கமாக உள்ளது.அவ்வாறு தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கும் விடயங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயமும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

'தற்போதைய அரசாங்கம் தயாரிக்கும் அரசியலமைப்பின் ஊடாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட உள்ளன. இதனூடாக தனிநாட்டுக்கான அடித்தளம் இடப்படுகிறது, நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றபடி மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.ஆனால் அவர்கள் குறிப்பிடுவது போன்று அவ்வறிக்கையில் எதுவும் இல்லை.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த் தலைமைகளின் நீண்ட காலக் கோரிக்கையாகும். அதற்கேற்ப 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்குடன் கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இணைப்பை நீடிப்பதா? இல்லையா ? எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் இணைப்பின் போது குறிப்பிடப்பட்டது. ஆனால் பல வருடங்கள் கடந்த போதிலும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாததால் மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த மூன்று மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 2006 ஒக்டோபர் 16 ஆம் திகதி தற்காலிகமாக இணைப்பட்டிருந்த வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்து தீர்ப்பை அறிவித்தது-. அதனூடாக இரண்டும் தனித்தனி மாகாணங்களாகின.

அதன் பின்னர் மீண்டும் வடக்கு கிழ்ககை இணைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் இணக்கமின்றி வடக்குடன் கிழக்கு இணைக்கப்படாது- என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றார். வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறான சூழலில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ்வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயார்' என்றும் 'வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தின் போது முஸ்லிம் தனிஅலகு அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம் 'வடக்குடன் கிழக்கை இணைய விட மாட்டோம் என்று ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவைத் தலைமையாகக் கொண்ட தேசிய காங்கிரஸ், அமைச்சர் ரிசாட் பதியுத்தீனை தலைமையாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் இவ்விணைப்பை எதிர்ப்பதோடல்லாமல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் சமூக ஆர்வலர்களும், மு-க்கியஸ்தர்களும் கூட இவ்விணைப்பு தொடர்பில் ஆட்சேபனையான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அற்ப அரசியல் இலாபம் தேடிட சிலர் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படப் போவதாகக் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் வீணான ஐயங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவது சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இவர்கள் அச்சப்படுவது போன்று வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட முடியாது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. மாறாக அரசியமைப்பு மற்று-ம் பாராளுமன்ற அங்கீகாரத்தின் ஊடாகவே அதனைச் செய்ய வேண்டும்.

ஆகவே இக்கோரிக்கை தொடர்பில் தேசிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டிய தேவை பலமாக உள்ளது. இதற்கு சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தின் நம்பிக்கைகள் முதலில் கட்டியெழுப்பட வேண்டும். இதற்காக உழைப்பது சம்பந்தப்பட்ட தர்ப்பினரின் பொறுப்பும் கடமையுமாகும். இல்லாவிட்டால் இது கோரிக்கையாகவே தொடர்ந்தும் நீடிக்கும்.


Add new comment

Or log in with...