இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பு வரைபு அல்ல | தினகரன்

இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பு வரைபு அல்ல

அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பு வரைபு அல்ல. அரசியல்வாதிகள் தவிர்ந்த ஏனைய பங்குதாரர்களுடனும் இடைக்கால அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை நாளைக்கே நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் தவறானவை. இடைக்கால அறிக்கையானது உப குழுக்களின் நிலைப்பாட்டைத் தாங்கியதாகவே இருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று(04) ஆரம்பமான சார்க் நாடுகளின்

சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 8ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் பணிகளில் அரசியல்வாதிகள் தவிர்ந்த ஏனைய பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும், எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் இந்தக் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலானது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையை பரீட்சித்துப் பார்க்க சந்தர்ப்பமாக அமையும்" என்றார்.

பாராளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்பிலும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டை ஐக்கியப்படுத்தக் கூடிய வகையிலும், ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையிலும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாகக் கூறியிருந்தார்.

"அரசியலமைப்பு தயாரிக்கும் பணியில் முதலாவது விடயம் சகலரினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதாகும். இதற்காக நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். அரசியலமைப்பை தயாரிக்க தெரிவுக்குழுக்களை அமைக்கும் கலாசாரமொன்றே இருந்தது. எனினும், நாம் இதிலிருந்து மாறுப்பட்ட முற்போக்கான செயற்பாடொன்றை கடைப்பிடித்தோம். முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றினோம்.

வரைபு குறித்த வழிநடத்தல்களை மேற்கொள்ள வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர்களுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்கள் ஊடாக தயாரிக்கப்படும் வரைபை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கும் பொறுப்பே வழிநடத்தல் குழுவுக்கு உள்ளது. இறுதியில் அரசியலமைப்பு சபையே இதை தீர்மானிக்கும்" என்றார்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பு தயாரிப்புக்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு பெரும்பான்மை அறிக்கை மற்றும் சிறுபான்மை அறிக்கைகளை சமர்ப்பிக்கும். ஆனால் நாம் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி இணக்கம் காணப்பட்ட விடயங்களை இடைக்கால அறிக்கையின் முதலாவது அலகிலும், கட்சிகளுக்கிடையில் காணப்படும் வேறுபட்ட கருத்துக்களை இரண்டாவது அலகிலும் உள்ளடக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையானது, புதிய அரசியலமைப்பின் வரைபு என்றும், இது நாளைக்கே நிறைவேற்றப்படப் போவதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர். இந்த எச்சரிப்புக்கள் பிழையானவை. அரசியலமைப்பை தயாரிக்கும் பணி என்பது கண்ணிவெடிகளுக்கு மேல் நடப்பதைப் போன்றதாகும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...