ஒரு பெயரில் தங்கியிருப்பது முட்டாள்தனம்; தினேஷுக்கு மகா சங்கத்தினர் தக்க பாடம் | தினகரன்

ஒரு பெயரில் தங்கியிருப்பது முட்டாள்தனம்; தினேஷுக்கு மகா சங்கத்தினர் தக்க பாடம்

சமஷ்டியா?அல்லது ஒருமித்த நாடா? என்பது பிரச்சினையல்ல.சில நாடுகளில் இரண்டையும் இணைத்த கலப்பு முறை காணப்படுகிறது. ஒரு பெயரின் மீது மட்டும் தொங்கி கொண்டிருப்பது முட்டாள் தனம் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புதிய யாப்பு தொடர்பில் வீண் புரளி பரப்பி வந்த தினேஷ் குணவர்தனவுக்கு மகாசங்கத்தினர் தக்க பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் கட்சிகளிடையே மாறு பட்ட கருத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. புதிய யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசியலமைப்பில் ஒருமித்த நாடு என்ற விடயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு போதும் பிரிந்து செல்ல முடியாதவாறே ஒருமித்த நாடு என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.பிரிட்டனிலும் ஆங்கிலத்தில் UNITARY STATE என்ற ஒருமித்த நாடு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.

பிரிக்கப்படாத நாட்டினுள் புதிய யாப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என மகாசங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர். தலையில் துருப்பிடித்து உள்ளவர்களுக்கு மகாசங்கத்தினர் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர். தினேஷ் குணவர்தன யாப்பு தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். அவருக்கு மகாசங்கத்தினர் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

சமஷ்டி என்பது நாட்டை பிரிக்கும் தீர்வு அல்ல என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளி்த்துள்ளது. சமஷ்டியா ஒருமித்த நாடா என்பது பிரச்சினையல்ல .சில நாடுகள் சமஷ்டி மற்றும் ஒருமித்த ஆகிய இரண்டையும் கலந்து முன்னெடுத்து வருகின்றன. ஒரு பெயரில் தொங்கிக்ெகாண்டிருப்பது முட்டாள் தனமாகும்.

மத்திய அரசிற்கும் மாகாண ஆட்சிகளுக்கும் எத்தகைய அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். யாப்பில் ஒருமித்த அல்லது சமஷ்டி என்பவற்றின் பகுதிகள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் .அதிகாரப்பகிர்வு தொடர்பான சூத்திரத்தில் இவையிருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் கட்சிகளிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகிறது. பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து ஜனாதிபதி பதவியை வைத்திருக்க வேண்டும் என சு.க கூறுகிறது.

1978 முதல் ஜனாதிபதி முறையை ஒழிக்க ​வேண்டும் என சு.க கோரிவந்தது. ஜ.தே.க ஆரம்பத்தில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டாலும் பின்னர் தமது நிலைப்பாட்டை அந்தக் கட்சி மாற்றியது. ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது பொதுவான நிலைப்பாடாகும். ஜனாதிபதியும் ஜனாதிபதி முறை ஒழிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

ஷம்ஸ் பாஹிம் 

 


Add new comment

Or log in with...