ஜனநாயக நீரோட்டத்தில் 70 வருட காலப் பயணம் | தினகரன்

ஜனநாயக நீரோட்டத்தில் 70 வருட காலப் பயணம்

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு வந்து 70 ஆண்டுகளாகின்றன. 1947 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதியன்று நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடியது. இதன்படி இம்மாதம் 14ம் திகதி சனிக்கிழமை எமது பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70 ஆண்டுகளை நிறைவு செய்கின்றோம்.

1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 1947 ஒக்டோபர் 14இல் பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்று முதலாவது பாராளுமன்றம் கூடியது. அது அரச பேரவை (State Council) என அழைக்கப்பட்டது. இதன் முதலாவது சபாநாயகராக பிரான்சிஸ் மொலமுரே தெரிவு செய்யப்பட்டார். அன்று தொடங்கிய பாராளுமன்ற ஜனநாயக முறை தங்கு தடையின்றி 70 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருப்பது வலுவான ஜனநாயக சக்தி எமது நாட்டில் பலமடைந்திருப்பதையே காட்டுகின்றது.

1947 ஒக்டோபரில் காலிமுகத்திடலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டடம் 35 ஆண்டுகளாக 1982 வரை இயங்கியது. 1982 முதல் 2017 இன்று வரையிலான 35 ஆண்டுகள் ஸ்ரீஜயவர்தனபுர கோட்டேயில் இயங்கி வருகிறது. இந்த 70 ஆண்டுகளில் எமது நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க எமது மறைந்த தலைவர்கள் ஆற்றிய பணிகள் மிக உயர்வானதாகும். இன்றைய 70 வது ஆண்டு நிறைவில் அவர்களைப் பற்றி நாம் மீள்நினைவூட்டிப் பார்க்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதியாக முன்கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு உறுதியானதொரு அரசியல் யாப்பு இருப்பது மிக முக்கியமானதாகும். இந்தப் பாராளுமன்றம், உறுதியான அரசியலமைப்பு என்பன தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் 70 வது ஆண்டு விசேட பாராளுமன்ற அமர்வின் போது எடுத்துக் கூறியிருக்கும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாகவே அமைந்துள்ளன.

பிளவுபடாத, ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து மக்களதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பினூடாக பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனைப் பலப்படுத்தும் முயற்சியில் யாரும் முரண்பட முடியாது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளதும், உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அந்த ஆதரவு முழுமையாக அரசுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாராளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியானது வரலாற்றில் முக்கிய தடம்பதித்து நிற்கின்றது. இந்த நாட்டின் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற வரலாறு பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் அடைந்ததோடு ஆரம்பிக்கின்றது. சோல்பரி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமையவே எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 1947 இல் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற முறையின் மூலம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளன. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளோ, உறுப்பினர்களோ அன்று எந்தவிதமான ஜனநாயக விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்டவில்லை.

ஆனால் இங்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஜனநாயக அரசியல் பயணத்தில் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் நிறையவே உருவாகியுள்ளன. கட்சித் தாவல்கள், கட்சிகளுக்கிடையே விமர்சனங்கள், பாராளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மூலம் அரசு கவிழ்ப்பு இவை எல்லாம் நடந்து ஜனநாயக அரசியலுக்கு வலுச் சேர்த்திருப்பது அவதானிப்புக்குரியதாகும்.

எனினும் அன்று பாராளுமன்றத்துக்கு வராத சில சக்திகள் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் காலத்துக்குக் காலம் செயற்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயக ஆட்சி முறையை தோற்கடிக்க இந்தச் சக்திகளால் முடியாமல் போயிற்று. இது எமது நாட்டு மக்கள் ஜனநாயக அரசியல் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

அன்று பாராளுமன்றத்துக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் 1978 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் மூலம் நேரடியாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. அதுவும் ஜனாதிபதிக்கு எல்லை கடந்த அதிகாரம் வழங்கப்பட்டமையால், பாராளுமன்றம் பலவீனப்படுத்தப்பட்டது. இதன் பாதகத் தன்மையை காலம் கடந்து அந்த யாப்பை உருவாக்கியவர்களே உணரத் தலைப்பட்டனர். அதன்படியே பிற்பட்ட காலத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 18 வது திருத்தமே பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியது.

2015 ஜனவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு உடனடியாகவே 19 வது திருத்தத்தைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தை பலம் கொண்டதாக மாற்றியமைத்தது. புதிதாக கொண்டுவரப்படவிருக்கும் அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பானது எமது நாட்டின் நீண்ட கால ஜனநாயக அரசியல் பயணத்தில் மற்றொரு வெற்றி இலக்காகவே நோக்க வேண்டியுள்ளது.

உலகளாவிய அரசியல் மாற்றத்துக்கு ஏற்புடையதாக எமது சுதந்திர நாட்டின் அரசியல் மாற்றங்கள் அமைய வேண்டியது மிக முக்கியமானதாகும். அரசியல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகளுடன் சிறிய கட்சிகளும் இணைத்து நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நல்ல தருணத்தில் ஜனநாயக அரசியலை வலுவூட்டக் கூடிய யாப்பு உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தை மேலும் பலமடையச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே மக்கள் கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு, இலக்கு நிறைவேற வேண்டும் என்பதே எமது அவாவாகும்.


Add new comment

Or log in with...