சிங்கள ராவய தலைவருக்கு ஒக்டோபர் 09 வரை விளக்கமறியல் (UPDATE) | தினகரன்

சிங்கள ராவய தலைவருக்கு ஒக்டோபர் 09 வரை விளக்கமறியல் (UPDATE)

 
கைது செய்யப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர், அக்மீமன தயாரத்ன தேரருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் தேரருடன் சரணடைந்த ரவீந்திர வர்ணஜித் பெரேரா, மற்றும் குறித்த தேரர் ஆகிய இருவரும் கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை (09) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
சந்தேகநபரான ரவீந்திர வர்ணஜித் பெரேராவை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

அகதிகள் அச்சுறுத்தல்; வாக்குமூலம் வழங்க வந்த சிங்கள ராவய தலைவர் கைது (UPDATE)

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மியன்மார், ரோஹிங்கிய அகதிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட மற்றும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், இன்று (02) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவருடன், நுகேகொட, கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திர வர்ணஜித் பெரேரா எனும் 40 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.
 
குறித்த நபர், கொழும்பு குற்றவியல் பிரிவில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

அகதிகள் அச்சுறுத்தல்; சிங்கள ராவய தலைவர் CCD யில்

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பு குற்ற பிரிவில் ஆஜராகியுள்ளார்.
 
கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி, கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மியன்மார், ரோஹிங்கிய அகதிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டமை மற்றும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அதன் அடிப்படையில் தற்போது (02) அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...