மஹிந்த தரப்பு மீண்டும் அரங்கேற்றும் நாடகம்! | தினகரன்

மஹிந்த தரப்பு மீண்டும் அரங்கேற்றும் நாடகம்!

ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னைய அரசாங்கத்தில் அதிகாரபலம் மிகுந்த அமைச்சராக விளங்கியவருமான பசில் ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமையன்று வட பகுதிக்கு விஜயம் செய்திருக்கின்றார். வடக்கின் பல்வேறு இடங்களிலும் இரு தினங்களாக அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்று விட்டு கொழும்பு திரும்பியிருக்கிறார் பசில் ராஜபக்ஷ.

இவ்விஜயத்தை சாதாரண ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. பசில் ராஜபக்ஷவின் வடபகுதி விஜயத்தை மஹிந்த அணியின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஆயத்தங்களில் ஒன்றாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகப் பதவியேற்ற பின்னர் பசில் ராஜபக்ஷ வடபகுதிக்கு முதன்முறையாக மேற்கொண்ட விஜயம் இதுவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியென்பது மஹிந்த தரப்பு அணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். முன்னாள் அமைச்சரும், மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் ஒத்துழைப்புடன் அக்கட்சி உருவாக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான தொடர்பைத் தவிர்த்து தனியாக செயற்பட்டு வருகின்ற போதிலும், தனக்கென்று தனியானதொரு கட்சியை ஆரம்பிப்பதில் இன்னும் தடுமாற்றத்துடனேயே உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தங்களது பிடியிலிருந்து முற்றாக விலகிப் போய் விடுமென்ற அச்சமே அதற்கான காரணம்.

மஹிந்த அணியினர் தனியான கட்சியொன்றை ஆரம்பிக்கும் விடயத்தில் தடுமாற்றமடைந்து கொண்டிருந்த வேளையிலேயே, தனியான அரசியல் கட்சியொன்றை ஜி.எல்.பீரிஸின் ஒத்தாசையுடன் அமைத்துக் கொண்டார் பசில் ராஜபக்ஷ.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கைப்பற்றுவதென்ற திட்டம் எதிர்காலத்தில் முற்றாகவே கைகூடாமல் போகுமானால், அரசியல் களத்தில் இறங்குவதற்கு மஹிந்த தரப்பினருக்குக் கட்சியொன்று அவசியம். எனவே எதிர்காலத் திட்டங்கள் கருதி ஆரம்பிக்கப்பட்ட கட்சியே பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகும்.

வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ஷ, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், முறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை.

யாழ். ஊரெழு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்களுக்கும் தமது எதிர்காலத் திட்டங்களை அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் அரசியல் வேலைத் திட்டத்தை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்திருப்பதாக பசில் ராஜபக்ஷ அங்கு கூறியுள்ளார். அத்துடன், வடபகுதி தமிழ் மக்களைச் சந்தித்து அரசியல் கருத்துகளை பரிமாறிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுவது குறித்தும் யாழ். ஊடகங்களுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ஷ.

அவர் வடபகுதிக்கு மேற்கொண்ட விஜயத்துக்கான நோக்கமும், மஹிந்த அணியினரின் எதிர்காலத் திட்டங்களும் இப்போது தெளிவாகப் புரிந்து விட்டன. அடுத்த வருடத்தில் நடைபெறவிருக்கின்ற வட மாகாண சபைக்கான தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றில் வட மாகாணத்தை குறிவைக்கப் பார்க்கிறது மஹிந்த தரப்பு.

வட மாகாண சபையையோ அல்லது அங்குள்ள உள்ளூராட்சி சபைகளையோ மஹிந்த தரப்பினர் கைப்பற்றிக் கொள்வது சாத்தியமில்லாத போதிலும், அச்சபைகளில் ஒன்றிரண்டு உறுப்பினர்களையாவது தெரிவு செய்வதன் மூலம் வடக்கில் சிறியளவிலாவது அரசியல் தளமொன்றை அமைத்துக் கொள்ளலாமென்பதே பசில் ராஜபக்ஷவின் வடபகுதி விஜயத்துக்கான நோக்கம் என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

2005 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு வரையான பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி நடத்தியவர். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் வரை, தமிழ் மக்கள் மீது தமது அரசாங்கத்துக்கு அபிமானம் உள்ளதாக வெளியுலகுக்கு காண்பித்து வந்தவர் அவர். ஆனால் தமிழர்கள் மீதான அவரது அபிமானம் வார்த்தையளவில் மாத்திரமே இருந்தது.

புலிகள் பலம் பெற்று விளங்கிய காலப் பகுதியில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றை அவர் முன்வைத்திருப்பாரானால் ஆயிரக்கணக்கான உயிரழிவுகளைத் தவிர்த்திருக்க முடியும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் சுபாவமே தலைகீழாக மாறிப் போனது. 2009 மே மாதத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரையான ஐந்தரை வருட காலம் அவரது அரசாங்கம் நடத்திய ஆட்சியானது தமிழர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கும் விரோதமானதாகவே அமைந்திருந்தது. தோற்கடிக்கப்பட்ட இனமாகவே தமிழினத்தை அவர் அடையாளப்படுத்தி வந்தார். அதேசமயம் தென்னிலங்கை பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவர் வளர்த்து வந்த சிங்கள தேசியவாத சிந்தனையானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை தென்னிலங்கையில் வளர்த்ததையும் மறந்து விடுவதற்கில்லை.

இனப்பிரச்சினையென்பதே நாட்டில் கிடையாதென்று கூறியதன் மூலம், தமிழினத்தின் அரைநூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட அரசியல் உரிமைக்கான அபிலாஷைகளை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டவர் மஹிந்த. அன்றைய ஆட்சிக் காலத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் காத்திருந்த தமிழ் மக்கள், 2015 ஜனவரியில் தீர்ப்பொன்றை வழங்கினர். அடாவடித்தனங்கள் நிறைந்த அன்றைய ஆட்சி பத்து வருடங்களுடன் முடிவுக்கு வந்தது.

தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்குவதில் மஹிந்த தரப்பினரின் மனஎண்ணம் எதுவென்பதை அன்றைய பத்து வருட கால ஆட்சி தெளிவுபடுத்தி விட்டது. அவர்களைப் பற்றி தமிழ் மக்கள் இனிமேல் புரிந்து கொள்வதற்கு எதுவுமே இல்லை.

இவ்வாறிருக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷ தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து வடபகுதி தமிழ் மக்களுக்கு புதிதாக இனிமேல் எதைத்தான் கூற வேண்டியிருக்கிறது? 


Add new comment

Or log in with...