Friday, March 29, 2024
Home » “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”

by damith
October 24, 2023 11:11 am 0 comment

அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ்பெற்ற வரிகளை இந்த நற்செய்தியின் இறுதியில் இயேசு தெரிவிக்கின்றார்.

விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி பொருளாதாரம், அரசியல் என்ற பல சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய இப் புகழ் மிக்கக் கூற்றையும் அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும், இந்த ஞாயிறு நமது சிந்னைக்குத் தருகிறது.

சீசருக்கும் கடவுளுக்கும் பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும் மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்.

கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த உவமைகள் வழியே இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம் இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.

மத்தேயு நற்செய்தி 22ஆம் அதிகாரத்திலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள ஞாயிறு நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால் பல உண்மைகளை, பல பாடங்களை நாம் பயிலமுடியும்.

கடந்த மூன்று வாரங்களாக இயேசு தன் உவமைகள் வழியே கசப்பான உண்மைகளை பரிசேயர்களுக்கு உணர்த்த முயன்றார். அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது சிக்கவைத்துவிடும் குறிக்கோளுடன் மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தான் ஏரோதியர்கள்.

பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கையளவில் எதிரிகள். யூத குலத்தில் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள்.

எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால்விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும் பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள்.

ஏரோதியர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகளை செய்தனர். கொள்கையளவில் இரு வேறு துருவங்களாக பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்து விட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை எழுப்புவது அவசியம்.

குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால் நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல் நமக்கு சிறந்த பாடம். இயேசுவை வீழ்த்தும் எண்ணத்துடன் கூட்டணி சேர்ந்துவரும் இவ்விரு குழுவினரும் இயேசுவைப் புகழ்ந்து பேசுவது நம்மை மீண்டும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. உதட்டளவில் புகழ்மாலைகளையும் உள்ளத்தில் நஞ்சையும் சுமந்து வருபவர்கள் இவர்கள்.

இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து இயேசு நேரடியாகவே பேசினார்:

மத்தேயு நற்செய்தி 22: 18-21

இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” (மத்தேயு நற்செய்தி 22:18-21)

என்று அவர்களிடம் கூறினார்.

வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட ‘தெனாரியம்’ என்ற நாணயம். அந்த நாணயத்தைப் பார்த்த பின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை நமக்கு மூன்றாவது பாடமாக அமைகின்றன. ‘தெனாரியம்’ என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம், உரோமைப் பேரரசன் சீசரின் உருவமும், “தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்” என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் ‘Pontifex Maximus’ அதாவது ‘குருக்களுக்கெல்லாம் பெருங்குரு’ என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர் தன்னை வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல் மதத்தலைவனாகவும் கடவுளாகவும் காட்டுவதற்கு அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.

சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள்’ என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். சீசரையும் கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும் அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் அதிகளவில் கண்டு வருகிறோம்.

இந்தச் சூழலில் நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல் கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார். அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?

அருட்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT